கோயம்புத்தூர்

பஞ்சு விலை கடும் உயர்வு: நூற்பாலைத் துறையினர் அதிர்ச்சி

DIN

நாட்டில் பஞ்சு விலையைத் தொடர்ந்து நூல் விலையும் உயர்ந்து வருவது நூற்பாலைத் துறையினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. நாட்டில் உள்ள பஞ்சாலைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3.75 கோடி பேல்கள் பஞ்சு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பேலுக்கும் மேல் பஞ்சு தேவைப்படுகிறது.
 ஆனால், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேல்கள் பஞ்சு மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் தமிழகத்துக்கு தேவைப்படும் பஞ்சில் சுமார் 90 சதவீதம் மகாராஷ்டிரம், தெலங்கானா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த பருத்தி ஆண்டில் ஒரு பொதி பஞ்சின் (356 கிலோ) விலை ரூ.38,500 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பருத்தி சீசனில், புதிதாக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கையின்படி ஒரு பொதி ரூ.45 ஆயிரத்தில் இருந்து தொடங்கியது.
 இந்த விலை அக்டோபர் கடைசியில் ரூ.47,500 ஆக உயர்ந்த நிலையில், பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறையத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.42,500 முதல் ரூ.43 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த பஞ்சு விலை, தற்போது ஒரு பொதி ரூ.46 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் நூல் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
 இதுகுறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறும்போது, கடந்த சில மாதங்களில் பருத்தி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த 20 நாள்களில் மட்டும் பஞ்சு விலை 8 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
 நிதியாண்டின் கடைசி வாரங்களில் பஞ்சு விலை உயர்ந்திருப்பது ஆச்சரியமூட்டுவதாகவும், அதேநேரம் கவலை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. நூற்பாலைகள் தங்களது உற்பத்தி செலவில் 65 முதல் 70 சதவீதத்தை மூலப் பொருளான பஞ்சுக்கே செலவிடுகின்றன. இதனால் 8 சதவீத விலை உயர்வு நூற்பாலைகளின் உற்பத்திச் செலவில் நேரடியாக எதிரொலிக்கும்.
 பஞ்சு விலை உயர்வின் தாக்கம் தற்போது நூல் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு வகையான நூல்களின் விலை 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உள்ளாடைகள் தயாரிப்பதற்குத் தேவையான நூலின் விலை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பஞ்சு விலையில் 8 சதவீத உயர்வு என்பது நூல் விலையில் கிலோவுக்கு ரூ.14 முதல் ரூ.16 வரை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சீசன் தொடங்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான விலை உயர்வு நூற்பாலைத் தொழில் துறையினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 அதேநேரம், சந்தை நிலவரத்தை ஆராய்ந்து நஷ்டம் அதிகமாக வரக்கூடிய சில ரகங்களை (கவுண்ட்) தயாரிக்காமல், மாற்று ரகங்களுக்கு மாறிக் கொள்ளும்படி பஞ்சாலைகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT