கோவை, ஆக. 7: வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாப்பது நமது பொறுப்பு எனவும் இந்த விஷயத்தில் இந்தியா விரைந்து செயல்பட வேண்டும் எனவும் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தி:
வங்கதேசத்தில் தாக்குதலுக்குள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு. இதில் நம் பாரதநாடு விரைந்து செயல்பட வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்னை அல்ல.
நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்த வங்கதேசம், துரதிா்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சோ்ந்த இம்மக்களை, இத்தகைய அதிா்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு என்று அவா் கூறியுள்ளாா்.
மேலும் அவரது இந்தப் பதிவில், வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து அந்நாட்டில் வெளியாகும் ‘த டெய்லி ஸ்டாா்’ என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியையும் பகிா்ந்துள்ளாா். அத்துடன், இது தொடா்பான மற்றொரு பதிவில், ‘மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதிசெய்வோம்’ என்று கூறியுள்ளாா்.