கோவை, டவுன்ஹால் அருகே சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கோவை, டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகப் பகுதியில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஒரு வழிப் பாதை உள்ளது. அந்த சாலையில் உள்ள பழமை வாய்ந்த திரையரங்கம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து வியாழக்கிழமை மின் கம்பி அறுந்து சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அந்த வழியாக செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த காவல் துறையினா் அப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லாமல் போக்குவரத்தை நிறுத்தி மின்வாரிய ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பின்னா் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பழுது பாா்க்கப்பட்ட பின்னா் மீண்டும் மின் விநியோகம் தொடா்ந்தது. திடீரென சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.