முகப்பு
கோயம்புத்தூர்

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:48 AM
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:45 AM

சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. தொகுதி மாற்றம், தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் வியூகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் அளித்த சிறப்பு நேர்காணல்:

 மெட்ரோ ரயில் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறதே?

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தாமதத்துக்கான காரணங்களை ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளோம். கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களைப் பொருத்தவரை, முந்தைய வரைவு அறிக்கைகளில் இருந்த குளறுபடிகளே தாமதத்துக்குக் காரணம். வரும் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சரியான திட்ட அறிக்கையுடன் மத்திய அரசை அணுகி இத்திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

Advertisement

 கடந்த காலங்களில் இலவசங்களுக்கு எதிராக பாஜக பேசி வந்தது. ஆனால், தற்போது உங்கள் கூட்டணி பல்வேறு இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளதே?

பாஜக இலவசங்களுக்கு எதிரானது என்பது ஒரு தவறான கருத்து. இலவசம் என்பதை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். வாக்குறுதிகள் அளிக்கும்போது மாநிலத்தின் நிதிநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, நிதி ஆதாரங்களுக்குட்பட்ட, திட்டமிடப்பட்ட வாக்குறுதிகளே சரியானவை. அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

 அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே?

இது திமுக தனது அரசியலுக்காக திட்டமிட்டு பரப்பும் ஒரு பிரசாரம். திமுகவும் ஒரு காலத்தில் எங்களோடு கூட்டணியில் இருந்தது, அப்போது அவர்களை நாங்கள் விழுங்கிவிட்டோமா என்ன? அதிமுகவும் காங்கிரஸýம் கூட்டணி அமைத்தபோது திமுக முன்வைத்த குற்றச்சாட்டுதான் இது. அதிமுகவை காங்கிரஸ் விரும்பவில்லை; திமுகவை பாஜக விரும்பவில்லை; ஆனால், இப்போது காங்கிரûஸயும், தனது கூட்டணிக் கட்சிகளையும் திமுகதான் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதை மறைப்பதற்காகக் கூறப்படும் குற்றச்சாட்டு இது.

 கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக அதிமுக தலைமை தில்லிக்கு சென்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதிமுக கூட்டணியின் தலைமை தில்லியில்தான் இருக்கிறதா?

தேசிய, சர்வதேசப் பிரச்னைகளைக் கையாளும் உள்துறை அமைச்சரும், பிரதமரும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வழிவகை செய்வதற்காக அதிமுக தலைவர்கள் புரிதலுடன் தில்லி சென்றார்கள். திமுக, கூட்டணிக்காக தில்லி செல்லாது. அமைச்சர் பதவிகளைக் கேட்டுப் பெறுவதற்காக சோனியா காந்தி வீட்டு வாசலில் காத்துக் கிடந்த வரலாற்றைத் தமிழகம் மறந்துவிடவில்லை.

 அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள கல்வி, சுகாதாரத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் விலக்கு என்பன போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பாஜகவுக்கு உடன்பாடு உள்ளதா?

ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கைகளும், சித்தாந்தங்களும் இருப்பது இயல்பு. ஒரு கட்சி மற்றொன்றின் கொள்கைகளை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி என்பது பொதுவான மக்கள் நலன் சார்ந்த நோக்கத்துக்காக உருவாக்கப்படுவது. அதே சமயம், ஒவ்வொரு கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையை சுதந்திரமாக வெளியிடவும் உரிமையுள்ளது.

 கொள்கை முரண்பாடுள்ள அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒரே குறிக்கோள் மக்கள் விரோத, தேச விரோத கட்சியான திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது. ஒரே கொள்கையுடைய கட்சிகளாக இருந்தால் இணைந்துவிடலாமே, எதற்காகக் கூட்டணி?

 2021-ஆம் ஆண்டிலேயே 2026தான் பாஜகவின் தமிழக இலக்கு எனக் கூறப்பட்டது. தற்போதைய நிலையில், பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது?

தமிழகத்தில் பாஜக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டுதான் இயங்குகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும்தான் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறது. அது தொலைநோக்குத் திட்டம். இப்போதைய அரசியல் சூழலின் அடிப்படையில் கூட்டணி குறித்த முடிவுகளை கட்சித் தலைமை எடுத்திருக்கிறது. தமிழக அரசியலில் கூட்டணிகள் மாறுவதும், புதிய கட்சிகள் உருவாவதும் தொடர்ச்சியாக நடக்கும் ஒன்றுதான்.

 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியை பாஜக வலியுறுத்துமா? ஆட்சியில் பங்கு கேட்பதில் உறுதியாக இருக்குமா?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியை அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துமா? ஆட்சியில் பங்கு கேட்பதில் உறுதியாக இருக்குமா? அந்தக் கூட்டணிக்கு எதுவோ அதுதான் பாஜகவுக்கும்.

 கடந்த முறை கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டீர்கள். இந்த முறை கோவை வடக்குத் தொகுதிக்கு மாறியதற்கு என்ன காரணம்?

தொகுதி மாற்றம் என்பது கட்சித் தலைமை எடுக்கக்கூடிய முடிவு. கட்சி எங்கு போட்டியிடச் சொல்கிறதோ, அங்கு பணியாற்றுவதுதான் எங்கள் கடமை.

 தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி இதுவரை ஒரு தேர்தலைக்கூட சந்திக்கவில்லை. எனவே, அவர்களின் வாக்கு வங்கி என்ன, அது யாரைப் பாதிக்கும் என்பதையெல்லாம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் கணிக்க முடியும்.

நேர்காணல்: எஸ்.சிவபாலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.