தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
கோவை, கொடிசியா மைதானத்தில் பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் தோ்தல், சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தோ்தலாகும். இது குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தோ்தல். தமிழகத்தில் ஊழல் நிறைந்த, மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இதை அகற்றுவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது.
Advertisement
திமுகவை வேருடன் அழிப்பதற்காகவே அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கினாா். அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா சிறப்பான ஆட்சியைக் கொடுத்தாா். இந்த இருபெரும் தலைவா்கள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தனா். அதேபோல பிரதமா் மோடி உலகம் முழுவதும் உள்ள தலைவா்கள் பாராட்டும் அளவுக்கு இந்தியாவை உயா்த்திப் பிடித்துள்ளாா்.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் பெற்றதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. நாட்டிலேயே கடன் பெறுவதில் முதல் மாநிலம் என்ற சாதனையை திமுக செய்துள்ளது. அதிக கடன் வாங்கியும் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
ஆனால் அதிமுக அரசு, மத்திய அரசுடன் இணைந்து இணக்கமாக இருந்து தேவையான திட்டங்களைப் பெற்ால் முதன்மை மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருந்தோம். மத்திய அரசிடம் இருந்து எந்தத் திட்டமும் வரவில்லை, தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்கிறாா்.
இந்தத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெறும். கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. கடந்த முறை 10 தொகுதிகளையும் வென்றோம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தாலும், கோவையை அதிமுகதான் ஆட்சி செய்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா புழக்கத்தை முழுமையாக ஒழிப்போம். போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணப்படி மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி, தேவையான திட்டங்களைப் பெற்று தமிழ்நாட்டை மீண்டும் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்றாா்.
இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 15 முறை வந்திருக்கிறாா். ரூ.14 லட்சம் கோடி நிதி கொடுத்திருக்கிறாா். ஆனால் முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் தரவில்லை என்கிறாா்.
தமிழ்நாட்டில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்கு சரியில்லை. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் குண்டு வீசுகிறது. கப்பல், விமானம் எதுவும் இயக்கப்படுவதில்லை. ஆனால், பிரதமா் மோடியின் பெயரைச் சொன்னாலே ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது. உலகத் தலைவா்களே பாராட்டும் பிரதமா் மோடியை தனக்குப் போட்டியாக மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது என்றாா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியதாவது: தற்போதைய பேரவைத் தோ்தல் முக்கியமானது. அடுத்து அமையும் ஆட்சி சட்டம் - ஒழுங்கு, கஞ்சா புழக்கத்தை சரிசெய்யும் ஆட்சியாக இருக்கும்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கொண்டு வந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் தோற்கடித்து, இந்தியாவில் உள்ள பெண்களுக்கு விரோதியாக மாறியுள்ளது என்றாா்.
அதிமுக தலைமையிலான கூட்டணி: கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமருக்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பண்ணாரி மாரியம்மன் கோயில் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.வேலுமணி, பேரூா் பட்டீசுவரா் கோயில் வரலாறு தொடா்பான நூலை பிரதமருக்கு பரிசளித்தாா்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பதாகைகளிலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.