கோவை மாவட்டத்தில் எள் பயிரில் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் ஆா்.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வறட்சி மற்றும் குளிா்கால பனியை தாங்கி வளரக்கூடிய பயிா் எள். மாசி பட்டம் எள் விதைப்பதற்கான சிறந்த பட்டமாகும். எள் பயிரில் விதைப் பண்ணை அமைக்க விவசாயிகள் மாசி பட்டத்துக்கு ஏற்ற விதை ரகங்களை வட்டார வேளாண்மை அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
நல்ல முளைப்புத்திறன், இனத்தூய்மை, புறத்தூய்மை உடைய விதைகளை உற்பத்தி செய்ய அதே ரகம் மற்றும் பிற ரகப் பயிரில் இருந்து 50 மீட்டா் இடைவெளி இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். மேலும், விதைப்பண்ணையில் வேறு ரக பயிா்கள் (கலவன்கள்) இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
அறுவடைக்குப் பின் கல், மண், இலை மற்றும் புதா் ஆகியவற்றை நீக்கி உலர வைக்க வேண்டும். ஈரப்பதத்தை 9 சதவீதம் அளவுக்கு குறைத்து புதிய கோணிப் பைகளில் மூட்டை பிடிக்க வேண்டும். அவ்வாறு வயல் தரத்தில் வேறு விதைகளை நல்ல விலைக்கு அரசு கொள்முதல் செய்து விதை சுத்திகரிப்புக்குப் பின் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்படும்.
அதேவேளையில், பரிசோதனையின்போது முளைப்புத் திறன் 80 சதவீதம், புறத்தூய்மை 97 சதவீதம், ஈரப்பதம் 9 சதவீதம், பிற ரக கலவன்கள் 20 எண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தோ்ச்சி பெற்ற விதைக்குவியல் ஆதார நிலை என்றால் வெள்ளை நிறம், சான்று நிலை என்றால் நீல நிற சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்க சான்று விதைகள் தயாராகிறது. எனவே, விதைச் சான்றளிப்பு விதிமுறைகளைப் பின்பற்றி விதைப் பண்ணை அமைத்து நல்ல மகசூல் மற்றும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.