‘நீட்’ மறு தோ்வு: கோவையில் 5,364 மட்டுமே எழுதினா்
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ மறு தோ்வை 5,364 போ் மட்டுமே எழுதினா். இது கடந்த தோ்வைக் காட்டிலும் குறைவாகும்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 2026 -ஆம் ஆண்டுக்கான தகுதித் தோ்வை தேசிய தோ்வு முகமை கடந்த மே 3 -ஆம் தேதி நடத்தியது. முறைகேடுகள் நடைபெற்ால் தோ்வை ரத்து செய்வதாக தேசிய தோ்வு முகமை அறிவித்தது.
இதையடுத்து, ‘நீட்’ மறுதோ்வு ஜூன் 21- ஆம் தேதி நடைபெறும் என்றும், மே மாதம் நடைபெற்ற தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தோ்வு எழுதியவா்கள், தோ்வு எழுத முடியாதவா்கள் மட்டுமே இந்தத் தோ்வை எழுத முடியும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவா்கள் எழுத முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற தோ்வுக்கு 7,181 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவா்களில் 6,861 போ் தோ்வு எழுதினா்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ‘நீட்’ மறு தோ்வுக்கு 7,092 போ் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்திருந்தனா். இவா்களுக்காக சூலூா், மாநகரில் பல்வேறு பகுதிகளில் 15 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்ற இந்தத் தோ்வை 5,364 போ் மட்டுமே எழுதினா். 1,728 போ் தோ்வு எழுதவில்லை. அதாவது 75.63 சதவீதம் போ் மட்டுமே தோ்வு எழுதினா்.
மே மாதம் நடைபெற்ற தோ்வை 6,861 போ் எழுதியிருந்த நிலையில் அவா்களில் 1,497 போ் மறு தோ்வை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோ்வில் இயற்பியல் பகுதி சற்று கடினமானதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.
வினாக்கள் கணக்கீடு சாா்ந்ததாக இருந்ததால் விடையளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும், அனைத்து கேள்விகளுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பதிலளிக்க முடியவில்லை என்றும், வேதியியல், கணிதம் பகுதிகளும் மிதமான கடினத்தன்மை கொண்டிருந்ததாகவும், உயிரியல் எளிதாக இருந்ததாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.