ஈரோடு

வெள்ள பாதிப்பு: இயல்பு நிலைக்குத் திரும்பிய சத்தியமங்கலம்

DIN

பவானி ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் சத்தியமங்கலத்தில் வெள்ளம் பாதித்த கரையோரப் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 75 ஆயிரம் கன அடியில் இருந்து 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. இதனால், சத்தியமங்கலத்தில் இயல்பு நிலை திரும்பியது.
நீலகிரி வனத்தில் பெய்த கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதனால், செவ்வாய்க்கிழமை இரவு அணைக்கு வந்த 10 ஆயிரம் கன அடி உபரி நீரை அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து, நீர்வரத்து 20 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக 45 ஆயிரம், 60 ஆயிரம், 75 ஆயிரமாக உயர்ந்தது. அணைக்கு வந்த உபரி நீரை அப்படியே ஆற்றில் திறந்துவிட்டனர். இதனால், பவானி ஆறு கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர் கிராமங்களைத் தாண்டி சாலையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாழை, நெல், மஞ்சள் பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரமாக குறைந்ததால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால், வெள்ளம் வடிந்து மூழ்கிய வீடுகள் வெளியே தெரிந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் புகுந்த வெள்ள நீரையும், சேற்றையும் சுத்தம் செய்து வெளியேற்றினர். கோட்டுவீராம்பாளையம், கோணமூலை, எம்.ஜி.ஆர். நகர், பழைய கலையனூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் வீடுகளை சுத்தம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ள நீர் புகுந்த இடங்களில் நகராட்சி சுகாதாரத் துறையினர் நோய்த் தொற்று கிருமிநாசினி தெளித்தனர். 
வெள்ளம் சூழ்ந்த சத்தியமங்கலம் வரசித்தி விநாயகர் ஆலயம், பவானீஸ்வரர்ஆலயம், மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் ஆகியவற்றில் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலத்தில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT