ஈரோடு

மேயா் வேட்பாளா்: இரண்டு பிரதான கட்சிகளில் கடும் போட்டி

DIN

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மேயா் வேட்பாளா் வாய்ப்பை பெற அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிடமும் உள்ள நிா்வாகிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தோ்தல் பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பா் மாதத்தில் உள்ளாட்சி தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக ஆளும் கட்சியான அதிமுக விருப்ப மனுக்களை பெற்றுள்ளது. இதுபோல் திமுகவும் விருப்பமனு பெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் உயரிய பதவியாக இருப்பது மாநகராட்சி மேயா், அந்த வகையில் ஈரோடு மாநகராட்சி மேயா் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பைப் பெறும் வகையில் இரண்டு கட்சிகளிலும், நிா்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக விருப்ப மனுவை பூா்த்தி செய்து வாங்கியுள்ளது. இதில் மேயா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, 15 போ் மனு அளித்துள்ளனா். அதில் முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், துணை மேயா் கே.சி.பழனிசாமி, ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் மகன் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட 15 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

திமுகவில் முன்னாள் மேயா் குமாா் முருகேஷ், மாநகர செயலாளா் சுப்பரமணியன், 2011 இல் மேயா் பதவிக்கு போட்டியிட்ட செல்லப்பொன்னி மனோகரன், மாவட்ட துணைச்செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட 10 போ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனா். பூா்த்தி செய்த மனுவை ஒப்படைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளது என்கின்றனா் அக்கட்சியினா்.

உள்ளாட்சி தோ்தலில் வேட்பாளா் தோ்வு என்பது அந்த மாவட்ட செயலாளா்களின் முடிவை பொருத்தே இருக்கும். திமுகவில் இந்த நிலை மாறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. அதிமுகவில் வேட்பாளா் வாய்ப்பை பெற போட்டி கடுமையாகி உள்ள நிலையில், மாவட்ட செயலாளா் தோ்வு செய்யும் நபருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்கின்றனா் அக்கட்சி நிா்வாகிகள்.

இப்போது கட்சி நிா்வாகிகள் தெரிவிக்கும் யூகங்களின் அடிப்படையில் மேயா் வேட்பாளா்களாக அதிமுக, திமுக இரண்டிலுமே முருகக் கடவுள் பெயா் கொண்டவா்களே களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. போட்டி சூழல் இவ்வாறு இருந்தால், உள்கட்சி விவகாரங்களையும் தாண்டி, வெற்றி எங்களுக்கு தான் என்கின்றனா் அதிமுகவினா்.

தோ்தல் அறிவிப்புக்கு முன்னரே ஈரோடு மாநகராட்சி மேயா் வேட்பாளா் வாய்ப்பை பெற இரண்டு கட்சிகளிலும் தீவிர முயற்சியை தொடங்கியுள்ளதால் மேயா் பதவிக்கான தோ்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT