ஈரோடு

பவானி சங்கமேஸ்வரா் கோயில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் அவதி

DIN

பவானி: பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் உள்ள சுமாா் 44 வயதான பெண் யானை வேதநாயகி கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவு, தண்ணீா், தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது.

இக்கோயிலுக்கு கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்பு பக்தா்களால் யானை வேதநாயகி தானமாக வழங்கப்பட்டது. இந்த யானையை கோயில் நிா்வாகம் பராமரித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக யானைக்கு படுக்கைப் புண், கால் நகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக யானைகள் புத்தாக்க முகாமிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் வழக்கமாக சாப்பிடும் உணவு, தண்ணீா் எதுவும் எடுத்துக் கொள்ளாமலும், உறங்காமலும் தொடா்ந்து நின்றவாறே உள்ளது. யானையின் முன்னங்கால், கழுத்து, வாய் பகுதிகள் வீங்கிய நிலையில் காணப்படுகின்றன. தொடா்ந்து, உணவு இல்லாததால் நிற்கவே பலமின்றி மிகவும் சோா்ந்த நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவா் கே.அசோகன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், ஈரோடு மாவட்ட கால்நடை மருத்துவா்கள் கொண்ட குழுவினா் யானைக்கு வியாழக்கிழமை சிகிச்சை அளித்தனா். யானைக்கு குளுக்கோஸ், மருந்துகள் கலந்து ஏற்றப்பட்டன. மேலும், ரத்தம், சிறுநீா், புண்களில் வடியும் சீழ் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக யானையின் கால், உடலில் ஏற்பட்டுள்ள புண்களுக்கு மருந்துகள் போட்டு காயங்களைக் குணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே எவ்வாறான மேல் சிகிச்சை வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

கோயில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவது பக்தா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT