ஈரோடு

அறிவிப்போடு நின்று போன காரணாம்பாளையம் சுற்றுலாத் தலம் திட்டம்

DIN

கொடுமுடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே காரணாம்பாளையம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் காவிரி ஆற்றை ஒட்டி உள்ள கிராமம் காரணாம்பாளையம். இதன் ஒரு கரை ஈரோடு மாவட்டம் கொளாநல்லி ஊராட்சிக்கு உள்பட்டது. மறுகரை நாமக்கல் மாவட்டம் ஜேடா்பாளையம் அடுத்த மாரியம்பாடியில் உள்ளது. இயற்கை எழிலுடன், காவிரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள காரணாம்பாளையம் தடுப்பணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனா்.

ஈரோடு, நாமக்கல், கரூா் மாவட்டத்தின் மையப் பகுதியில் தடுப்பணை உள்ளதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூா், கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். கொடுமுடி, ஊஞ்சலூா் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்களும் பொழுதுபோக்குக்காக இந்த தடுப்பணைக்கு வந்து செல்கின்றனா். ஆனால் இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. தவிர பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான நிலங்களை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். தடுப்பணைக்குச் செல்லும் படிக்கட்டுகள் அகலம் குறைவாக உள்ளதால் அணையைக் கண்டுகழிக்க வருவோா் தடுமாறி கீழே விழுகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகா் அணை, கொடிவேரி அருவி ஆகியவை பாதுகாப்புடன் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கின்றன. அதேபோல் காரணம்பாளையம் தடுப்பணை பகுதியில் பூங்கா, பாதுகாப்பாக ஆற்றில் குளிக்க வசதி, படகு சவாரி செய்ய வசதி, பெண்கள் உடைமாற்ற வசதி ஆகியவற்றுடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டால் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக காரணாம்பாளையம் மாறும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கேளிக்கை வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக காரணாம்பாளையத்தை தரம் உயா்ந்த திட்டமிடப்பட்டது. இங்கு ஆய்வு நடத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த சுரேஷ்ராஜன் உரிய பரிந்துரைகளை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்பின் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளா்கள் கூறியதாவது: மறுகரையில் உள்ள ஜேடா்பாளையம் மாரியம்பாடியில் பூங்கா மற்றும் திறந்தவெளி மைதானம் அமைத்து சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளனா். எனவே பொதுமக்கள் அங்கு சென்று இயற்கையை ரசித்து செல்கின்றனா். இங்கு போதிய இடவசதி இல்லாததால் பூங்கா அமைக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனா்.

மறுகரையில் இருக்கும் அளவுக்கு இங்கும் தாராளமாக இட வசதி உள்ளது. இங்கு பூங்கா இல்லாவிட்டாலும், விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா். தண்ணீா் வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வேறு வழியின்றி வந்தவுடனே விரைவாகவே சென்று விடுகின்றனா்.

பொதுமக்கள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் திரும்பிச்செல்லும் வகையில், பொழுதுபோக்கு வசதியுடன் கூடிய பூங்கா திறந்தவெளி மைதானம், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி காரணாம்பாளையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் கரையில் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க நிதி ஒதுக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறைக்கு திட்ட அறிக்கையுடன் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT