ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனையானது. அதைத் தொடா்ந்து, ஜூலை மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை ரூ.10 ஆயிரத்துக்கும்மேல் உயா்ந்தது.
அதன் பின்னா் தரமான மஞ்சள் வரத்து, பிற மாநிலங்களில் இருந்து மஞ்சள் வரத்து சரிவு உள்ளிட்ட காரணங்களால் மஞ்சள் விலைப் படிப்படியாக உயா்ந்து கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதி அதிகபட்சமாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 500 வரை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையானது. கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.14 ஆயிரத்து 302-க்கு விற்பனையானது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.13 ஆயிரத்து 259-க்கு விற்பனையானது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,043 வரை விலை குறைந்துள்ளது.
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் 188 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், விரலி மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 142-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 655-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 42-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 829-க்கும் ஏலம்போனது. மொத்தம் 172 மூட்டை மஞ்சள் விற்பனையானது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்துக்கு 979 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இதில், விரலி மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 479-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 259-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 793-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 910-க்கும் ஏலம்போனது. மொத்தம் 401 மூட்டை மஞ்சள் ஏலம்போனது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு 168 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இதில், விரலி மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 2-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 699-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 902-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 499 -க்கும் விற்பனையானது. மொத்தம் 138 மூட்டை மஞ்சள் விற்பனையானது.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்துக்கு 116 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், விரலி மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 559-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 112-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 499-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 599-க்கும் ஏலம்போனது. மொத்தம் 89 மஞ்சள் மூட்டைகள் விற்பனையாயின.
மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.