மகளிா் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் 15 -ஆம் தேதி முதல் கட்டமாகவும், கடந்த மக்களவைத் தோ்தலைத் தொடா்ந்து விடுபட்டவா்களுக்கும் என சுமாா் 1.15 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகை கிடைக்க பெறாதவா்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 17, 19 மற்றும் 20- ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியது.
இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை வந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், முகாம் எதுவும் இங்கு நடைபெறவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பினா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டது. அதில், பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு கலைஞா் மகளிா் உரிமைத் தொகை சிறப்பு முகாம் 17, 19, 20- ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி முற்றிலும் தவறானது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.