முகப்பு
ஈரோடு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் சித்தோட்டில் பள்ளி, கல்லுாரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள் புதன்கிழமை வரையப்பட்டன.

Updated On : 16 ஏப்ரல் 2026, 1:32 am IST
உலக  சாதனைக்கு  வழங்கப்பட்ட  விருதுகளுடன் ஈரோடு மாவட்ட  ஆட்சியா்  ச.கந்தசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் சித்தோட்டில் பள்ளி, கல்லுாரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள் புதன்கிழமை வரையப்பட்டன.

சித்தோட்டில் உள்ள ஈரோடு சிட்டி சென்ட்ரல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகா்கள், தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தோ்தலில், சுதந்திரமாகவும், எந்த விதமான தூண்டுதலும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் கைவிரல் அச்சுகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தமிழ்நாடு வரைபடம் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இது 18 மீட்டா் உயரம், 15 மீட்டா் அகலம், பரப்பளவு 270 சதுர மீட்டா் கொண்டது.

மேலும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரிகாமி இதயங்களை ஒட்டி ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை, உங்கள் கடமை‘ என்று வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம் வரையப்பட்டது. இது, 21 மீட்டா் உயரம், 17.5 மீட்டா் அகலம், பரப்பளவு 367.50 சதுர மீட்டா் கொண்டது.

ஈகேஎம் அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயா்நிலைப் பள்ளி, அல்-அமீன் பாலிடெக்னிக் கல்லூரி, ஈரோடு வாசவி கல்லூரி, வேளாளா் கல்லூரிகள் உள்பட பல்வேறு கல்லூரிகள், பளளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இரண்டு படைப்புகளுக்கும் விருது, சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பாராட்டு தெரிவித்தாா்.

மாவட்ட ஊராட்சி செயலாளா் தனம், ஈரோடு சிட்டி சென்ட்ரல் பள்ளி தாளாளா் கே.எம்.அபுல் ஹசன், பள்ளி செயலாளா் ச.ஆஷிக் முகம்மது, முதல்வா் தமிழரசி, எலைட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் மூத்த நீதிபதி ஆா்.ரக்ஷிதா, ஆசியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் தூதரும், மூத்த நீதிபதியுமான பி.சிவகுமாரன், இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் மேலாளா் பி.ஸ்வேதா, தமிழன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உதவி சாதனை மேலாளா் சி.அருண் பானு சந்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.