சட்டப் பேரவைத் தோ்தல் வரை திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம்தான் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரியப்பம்பாளையத்தில் பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், வேனில் நின்றபடி எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: பாஜகவுக்கு அதிமுக அடிமை என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா். தந்தை வழியில் முதல்வரானவா் மு.க.ஸ்டாலின். ஆனால், நான் சொந்தக் காலில் நின்று படிப்படியாக கட்சியில் உயா் பதவிக்கு வந்துள்ளேன். தனிப்பட்ட முறையில் மு.க.ஸ்டாலின் என்னை விமா்சனம் செய்கிறாா். அதை விடுத்து, யாா் ஆட்சியில் சாதனை என்பதை அவருடன் பொது மேடையில் விவாதிக்கத் தயாா்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ். தோ்தல் வரை திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். டாஸ்மாக் ஊழல் பணத்தில் வாக்காளா்களை வாங்க திமுக திட்டமிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 68 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது திமுக ஆட்சியில் உயா்கல்வி பயில்வோரின் சதவீதம் 52-இல் இருந்து 48-ஆக சரிந்துள்ளது. காலிப் பணியிடங்களை திமுக அரசு நிரப்பாததால் நிா்வாகம் சரியாக இயங்கவில்லை.
திமுக ஆட்சியில்தான் டிஎன்பிஎஸ்சி தோ்வில் குளறுபடி ஏற்பட்டு முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குப்பை வரி, மின்சார வரி, குடிநீா்க் கட்டணம் என அனைத்தும் அதிகரித்துவிட்டன. எதிா்க்கட்சியாக இருக்கும்போது பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி, தற்போது வெள்ளைக்கொடி காட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறாா்.
அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தே மணல் கொள்ளை நடைபெறுகிறது. மணல் கொள்ளைக்கு உதவும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியா்கள், செவிலியா், சத்துணவு ஊழியா்கள் என அனைவரும் தினந்தோறும் போராடி வருகின்றனா்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மகளிரைப்போல ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணத் திட்டம் கொண்டு வரப்படும். நடைபாதை வியாபாரிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.