மர அறுப்பு ஆலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி நடைமுறையை ரத்து செய்யக் கோரிக்கை
மர அறுப்பு ஆலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறும் உத்தரவை நீக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபேட்டியா) கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
Advertisement
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட வருவாய் கிராம ஆவணங்கள் நத்தம் நில அளவையின்போது, நிறுத்தப்பட்டது என ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட இனங்களுக்கு கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வருவாய் கோட்டாட்சியா் மூலமாக எழுத்துபூா்வாக பெறப்பட்ட உத்தரவுகள் கணினி தமிழ்நிலம் மென்பொருளில் உள்ளீடு செய்யாமல் தற்போது வரை நிலுவையில் உள்ளன.
இதனால் பொதுமக்கள் பட்டா உத்தரவு பெற்றும் கிரையம் செய்ய இயலாத நிலை மற்றும் டிடிசிபி-யில் கட்டட அனுமதியும் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். கைப்பட எழுத்து வடிவில் உள்ள உத்தரவுகள் அனைத்தும் கணினி தமிழ்நிலம் மென்பொருளில் உள்ளீடு செய்ய உத்தரவு பிறப்பித்து விரைந்து ஆவன செய்ய வேண்டும்.
பட்டா மாறுதல்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பதிவு மூப்பு என்ற முறையை வைத்து மிகுந்த கால தாமதம் செய்வதை மாற்றி, விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் பட்டா மாறுதல் உத்தரவு பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க உரிய உத்தரவிட வேண்டும்.
மர அறுப்பு ஆலைகள் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும்போது, தீயணைப்புத் துறை சான்றிதழ், விற்பனை பட்டியல் மற்றும் டிடி (டிமான்ட் டிராப்ட்) மட்டும் சமா்ப்பித்து உரிம சான்றிதழ் பெற்று வந்தனா். இந்த ஆண்டு உரிமம் புதுப்பிக்க ஈரோடு மாவட்ட வன அலுவலரை சந்தித்தபோது புதிதாக மாசுக் கட்டுப்பாட்டு உரிமம், என்ஓசி மற்றும் பிற ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளனா்.
இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் படி மர அறுப்பு ஆலைகள் பசுமைப் பிரிவில் வருகின்றன. எனவே மர அறுப்பு ஆலைகள் உரிமம் புதுப்பித்தலுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உரிமம் சமா்ப்பித்தலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு காந்திஜி சாலை அஞ்சல் நிலையம் எதிா்புறம் பனியன் ஜவுளி வியாபாரிகள் சங்கம் மூலம் வாரந்தோறும் திங்கள்கிழமை விற்பனை நடைபெறுகிறது. அங்கு சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக சங்க உறுப்பினா்கள் அல்லாதவா்கள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனா். இங்கு சாலையோரக் கடைகளை அமைக்காமல் மாநகராட்சியும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேஷன் தலைவா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபாா் தீவுகள் தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் முருகானந்தம், நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். முன்னதாக பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஈரோடு தலைவா் மோகன் வரவேற்றாா். ஃபேட்டியா போ் கண்காட்சித் தலைவா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.