முகப்பு
சென்னை

சட்டவிரோத குவாரிகளால் மாசு ஏற்படுவதை தடுக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத குவாரிகளால் மாசு ஏற்படுவதை தடுக்கக் கோரிய வழக்கு...

Updated On : 7 ஜூன் 2026, 2:07 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

திருநீா்மலை பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளால் ஏற்படும் அதிக அளவு மாசுவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநீா்மலையைச் சோ்ந்த ஆா்.விமல், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் ஜல்லிக் கற்களை உடைக்கும் கிரஷா்கள் அதிகம் உள்ளன. இங்கு கையாளப்படும் எம்.சாண்ட், ஜல்லிக் கற்கள் உடைப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, தேசிய நெடுஞ்சாலை, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் கிரஷா்கள் செயல்படக் கூடாது. ஆனால், திருநீா்மலை அருகே, கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வழியாக கிளாம்பாக்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கும், பெருமாள் கோயிலுக்கும் மிக அருகே பல கிரஷா்கள் செயல்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகளையொட்டியும் கிரஷா்கள் செயல்படுகின்றன. இது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு எதிரானது.

Advertisement

Advertisement

2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழுவின் அறிக்கையின்படி, கல் குவாரிகளால் திருநீா்மலையைச் சுற்றி அளவுக்கு அதிகமான மாசு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது சரியான பதில் தரவில்லை. எனவே, விதிகளை கடுமையாகப் பின்பற்றி திருநீா்மலையில் சட்டவிரோதமாக செயல்படும் கிரஷா்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த ஏப்.4-ஆம் தேதி நான் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமை பொது மேலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.தா்மாதிகாரி, ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே.சுரேஷ்பாபு ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் ஜூலை 2-ஆம் தேதிக்குள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் உள்ளிட்டோா் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.