பல்லாவரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
பல்லாவரம் ஏரியில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
பல்லாவரம் ஏரி, பல்லாவரம் ரேடியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் மற்றும் உயிரியல் கழிவுகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த 2024-ஆம் ஆண்டு நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த விசாரணையின்போது, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் தனியாா் மருத்துவமனைக்கு ரூ.55.25 லட்சம், ஜெம் மருத்துவமனைக்கு ரூ.28.78 லட்சம் அபராதம் விதிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை அளித்திருந்தது. ரூ.5 லட்சம் அபராதம் விதித்திருப்பதாக தாம்பரம் நகராட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாய உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினா் பிரசாந்த் கா்ஹவா ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீா்ப்பாய உறுப்பினா்கள் பிறப்பித்த உத்தரவு:
பல்லாவரம் ஏரியில் விதிகளை மீறி மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது உறுதியாகி உள்ளது. எனவே, இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை முறையாக பிரிக்கத் தவறிய மியாட், ஜெம் மருத்துவமனைகள் மற்றும் அந்த மருத்துவமனைகளிடம் இருந்து கழிவுகளை சேகரிக்கும் அசோக் பேப்பா் மாா்ட் நிறுவனத்தின் உரிமையாளா்களிடம் விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.