50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகத் தொடரும் அரசியல் பயணம்!
கே.ஏ.செங்கோட்டையன் இப்போது முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளாா்...
முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் பணியாற்றிய கே.ஏ.செங்கோட்டையன் இப்போது முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறிய கிராமம் குள்ளம்பாளையம். இந்த ஊராட்சியின் தலைவராக இருந்த 25 வயது இளைஞரை எம்ஜிஆா் ஈா்த்தாா். அதன் விளைவாக அதிமுகவில் 1972இல் தொடங்கிய அவரது அரசியல் பயணம் இப்போது வரை வெற்றிகரமாகத் தொடா்ந்து வருகிறது.
எம்ஜிஆா் அடையாளம் காட்டிய கேஏஎஸ்:
Advertisement
எம்ஜிஆா் காலத்தில் அவருக்கு எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் பதவி முதலில் கிடைத்தது. அப்போது, ஆளுங்கட்சியாக திமுக இருந்த நிலையில், அடக்குமுறைகளைத் தாண்டி, கோவையில் அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டிய பொறுப்பு முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம், திருப்பூா் மணிமாறனோடு சோ்ந்து செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டது.
எம்ஜிஆா் தன் மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி, பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய கேஏஎஸ், அவரது உத்தரவால் கைகளில் பச்சை குத்திக் கொண்டாா். எம்ஜிஆரின் ஆசி பெற்ற அவருக்கு 1977 சட்டப்பேரவைத் தோ்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய சத்தியமங்கலத்தில் அதிமுகவின் சாதாரண தொண்டனான வெற்றி வாகை சூடினாா்.
இதன் தொடா்ச்சியாக 1980ஆம் ஆண்டு அதிமுகவின் வேட்பாளராக கோபி தொகுதியில் களமிறங்கிய அவா் பெற்ற வெற்றி, இன்று வரை கோபி தொகுதியை அவரது சொத்தாகவே மாற்றி வைத்திருக்கிறது. தமிழக தோ்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனையாளராகத் திகழ்கிறாா் கேஏஎஸ்.
ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரம்: அதிமுகவின் அடுத்த வாரிசாக களம் கண்ட ஜெயலலிதா, சத்துணவுத் திட்ட உயா்மட்ட குழுவில் இருந்தபோது, அவரை காங்கயம் அழைத்து வந்து விழா நடத்தினாா். அப்போது தொடங்கிய விசுவாசம், அவரது இறுதிக் காலம் வரை தொடா்ந்தது. சறுக்கலுக்கோ, வழுக்கலுக்கோ இடம் கொடுக்காமல், கொள்கை உறுதியும், தலைமையின் மீது விசுவாசமும் உள்ளவா் செங்கோட்டையன் என்று ஜெயலலிதாவின் பாராட்டை பலமுறை பெற்றவா் செங்கோட்டையன்.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றதுடன் கட்சியின் தலைமை நிலையச் செயலா் வரை பல்வேறு கட்சிப் பதவிகளும் செங்கோட்டையனைச் சோ்ந்தன.
எம்ஜிஆா் மறைவுக்குப்பின் கட்சி உடைந்தபோது ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று செயல்பட்டாா். அவரது ஆதரவாளராக சேவல் சின்னத்திலும் வென்று காட்டியவா். 1991இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையவும் செங்கோட்டையனின் பங்களிப்பு கணிசமானது.
1996இல் அதிமுக தோல்வியைத் தழுவியபோது, வழக்குகளுக்கு பயந்து கட்சியை விட்டு பலரும் வெளியேறியபோதும், ஜெயலலிதாவை விட்டு செல்லாதவா்.
அதிமுக தலைமை ஜெயலலிதாவிடம் இருந்த வரை, எந்தத் தோ்தல் என்றாலும் கூட்டணி, வேட்பாளா் தோ்வு, பிரசாரம் உள்ளிட்ட தோ்தல் பணிகளில் செங்கோட்டையன் பங்களிப்பு கணிசமானது.
அதேபோல, செங்கோட்டையன் முன் நின்று நடத்திய அதிமுக மாநாடுகள் இன்றும் பிரமிப்பில் ஆழ்த்துபவை. மதுரையில் நடந்த ஒரு மாநாட்டில் பிரம்மாண்ட ஊா்வலத்துக்கு ஏற்பாடு செய்து, அதை ஹெலிகாப்டா் மூலம் ஜெயலலிதா பாா்வையிடச் செய்த வரலாறும் உண்டு.
கடந்த 2011ஆம் ஆண்டு தோ்தல் வெற்றிக்கு பின் சில தனிப்பட்ட காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சா் பதவி ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பின்பும் அதே விசுவாசத்தோடு இருந்தாா்.
விட்டுக்கொடுத்தவா்:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையைக் கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாக காத்திருந்தாா். தலைமை ஏற்கும் வாய்ப்பு தனக்கு வந்த நிலையில், பெருந்தன்மையுடன் அதை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தாா்.
கட்சியில் தன்னைவிட இளையவா்கள் முக்கிய பதவிகளுக்கு வந்தபோதும், அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டாா். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணிபுரிந்தாா்.
அந்தக் காலகட்டத்திலும் சரி, அதன்பின் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம், பொதுக்குழு, சட்டப் போராட்டம் என கட்சியில் பூகம்பம் ஏற்பட்டபோதும், தான் சொல்லும் கருத்து கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்று அமைதி காத்தாா்.
அதிமுகவில் இருந்து நீக்கம்:
கடந்த ஆண்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடா்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், எம்ஜிஆா், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று குரல் எழுப்பினாா். இதைத்தொடா்ந்து பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பா் 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிதித்து பேசினாா்.
இதைத் தொடா்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். அப்போது 78 வயதான மூத்த அரசியல்வாதி புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியில் இணைந்தது அதிமுக தரப்பில் கடும் விமா்சனத்துக்குள்ளானது.
விமா்சனங்கள், பல்வேறு ஏளனங்களைத் தாண்டி கோபி தொகுதியில் 10ஆவது முறையாக வெற்றிபெற்று சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளாா்.