முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

ஜா vs ஜெ; இபிஎஸ் vs ஓபிஎஸ்; இபிஎஸ் vs வேலுமணி! மீண்டும் மீண்டுமா?

அதிமுகவில், எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜா vs ஜெ; ஜெயலலிதா மறைவுக்குப் பின் இபிஎஸ் vs ஓபிஎஸ்; தற்போது இபிஎஸ் vs வேலுமணி என பிளவுபடுவது பற்றி..

Updated On : 12 மே 2026, 11:53 am IST
அதிமுக அலுவலகம் - DPS
பகிர்:

அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் எனும் பெயரைக் கேட்டால், நினைவு கூறப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அவர் திமுகவில் இருந்து வெளியேறியது. அதன்பின் அவரால் 1977-ல் தொடங்கப்பட்ட அதிமுகவை தொடர்ந்து பத்தாண்டுகள் அரியணையில் அமர வைத்து அக்கட்சியை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிய பெருமை எம்ஜிஆரையே சேரும்.

ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு முதல்முறையாக அதிமுக இரண்டாக பிளவுபட்டது. கடந்த 1987 டிச.24-ல் எம்ஜிஆர் மறைந்தார். அப்போதே அதிமுகவின் அடுத்த தலைமையை தீர்மானிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதிமுகவின் அப்போதைய மூத்த தலைவரான ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியின் பக்கம் நின்றனர். அதேநேரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பக்கமும் அதிமுகவினர் அணிவகுத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட ஜானகி, அந்த ஆட்சியைத் தக்கவைக்க பேரவையில் 21 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநரால் கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட முயற்சித்தனர். ஆனால், அது நடந்தேறவில்லை. இறுதியில் கடந்த 1988 ஜன.28-ல் சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா தரப்பு எம்எல்ஏக்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டு,நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 எம்எல்ஏக்களின் ஆதரவோடு ஜானகி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

Advertisement

இதனால், அன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் ஜானகி மற்றும் ஜெயலலிதா தரப்பு அணிகள் அடிதடியில் ஈடுபட்டு, சட்டப்பேரவையில் இருந்த மைக் உள்ளிட்ட பொருள்கள் சூறையாடப்பட்டன.

அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான காவல்துறையினர் சட்டப்பேரவைக்குள் நுழைந்து பேரவை உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் 117-க்கும் குறைவான சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றது மற்றும் சட்டப்பேரவைக்குள் நடந்த இந்த கலவரத்தின் காரணமாகவும் தமிழக சட்டப்பேரவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது வரலாறு.

இதனால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1989-ல் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக (ஜா) மற்றும் அதிமுக (ஜெ) என இரு அணிகளாக பிரிந்து தேர்தலைச் சந்தித்தன. இதில் ஜானகி அணிக்கு இரட்டை புறாவும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டன. அதிமுகவில் ஏற்பட்ட பிளவு அந்த தேர்தல் திமுகவின் வெற்றிக்கு வித்திட்டது.

தனது கணவர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியின் நலனே முக்கியம் என கருதிய ஜானகி அரசியலில் இருந்து விலக, அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தார் ஜெயலலிதா. 1989-ல் நடந்த பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களில் வென்றிருந்தது. அந்த தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து தேர்வான ஜெயலலிதா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

அதன்பின்னர் 1991-96, 2001-06, 2011-16 மற்றும் 2016-21 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக அக்கட்சியை வழிநடத்தினார். ஆனால், இந்த காலக்கட்டத்தில் அவர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக இருமுறை முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில், தமிழக முதல்வராகப் பதவி வகிக்க ஜெயலலிதாவால் வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்தான் தற்போது போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்.

ராணுவக் கட்டுப்பாட்டுடன் தனது தலைமையின் கீழ் அதிமுகவை வைத்திருந்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ஆம் ஆண்டு செப்.27-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதே வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மற்றும் இளவரசி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.

இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்.22-ல் உயிரிழந்தார். இதையடுத்து அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் அணி திரண்டனர். கடந்த 2016-ஆம் ஆண்டு டிச.29-ஆம் தேதி வி.கே.சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சியில் இருந்த அதிமுகவின் முதல்வர் பதவிக்கான தேர்வாகவும் அவரே இருந்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகி தர்மயுத்தம் நடத்தினார். இந்தநிலையில், கடந்த 2017 பிப்ரவரி முதல் 2021 ஜனவரி வரையிலான நான்கு ஆண்டுகள் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனால் சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நேரிட்டது.

summary

In AIADMK, after MGR's death, it was Jha vs J; after Jayalalithaa's death, it was EPS vs OPS; now it is about the split between EPS vs Velumani..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.