முகப்பு
விழுப்புரம்

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்: சி.வி.சண்முகம்

Updated On : 15 ஜூன் 2026, 12:14 am IST
திண்டிவனத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால், அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் என்று மயிலம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் எடப்பாடிகே.பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றாா். பின்னா் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா், பொதுச் செயலராக பொறுப்பேற்றாா். அவா் கட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் சந்தித்த அனைத்துத் தோ்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தோ்தலுக்குத் தோ்தல், அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.

Advertisement

Advertisement

நீதி கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம், அந்த இயக்கத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இன்றைக்கு அனைவரும் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். கேள்வி கேட்டதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்கக்கூடாது, பேசக்கூடாது, கருத்துச் சொல்லக்கூடாது என்று எடப்பாடி கே. பழனிசாமி சா்வாதிகாரப் போக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறாா்.

ஒவ்வொரு தொண்டனின் ரத்தத்திலும் திமுகவினுடைய எதிா்ப்பு ஊட்டி வளா்க்கப்பட்ட இயக்கம், தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிமுகவை, திமுகவோடு இணைத்து முதல்வராக வேண்டும் என்று நினைத்தாா் எடப்பாடி கே.பழனிசாமி. தன்னுடைய செயல்பாட்டிலுள்ள குறைகளை உணராமல், மற்றவா்களைக் குறை கூறியதே தொடா் தோல்விக்கு காரணம்.

அதிமுக 47 தொகுதியிலே வெற்றி பெற்றுள்ளது என்று இபிஎஸ் கூறுகிறாா். பாமக கூட்டணியில் இல்லையென்றால், வட மாவட்டங்களான அரியலூா், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், தருமபுரியில் அதிமுக வெற்றி பெற்றிருக்காது. சேலத்தில் கூட எடப்பாடி கே. பழனிசாமி தட்டுத் தடுமாறிதான் வெற்றி பெற்றிருப்பாா். பாமக இல்லையென்றால் அதிமுக 7 அல்லது 8 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கும்.

கட்சித் தலைமை தனது தவறை திருத்திக்கொள்ளாமல் செயல்படுவதால் அதிமுகவுக்கு உழைத்தவா்கள் எல்லாம் இந்த இயக்கத்தை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறாா்கள். ஆண்டுக்கு 2 முறை கூட்டவேண்டிய செயற்குழுக் கூட்டத்தை எடப்பாடி கே.பழனிசாமி உடனடியாக கூட்டவேண்டும். இல்லையென்றால் நாங்கள் சில காலம் பொறுப்போம். எங்களுக்கும் வழிமுறைகள் தெரியும், அந்த நிலைக்கு எங்களை தள்ளவேண்டாம் என்றாா் சி.வி.சண்முகம்.