நீலகிரி

உதகையில்  செயற்கை ஓடுதளம் திட்டம் நிறைவேறுவது எப்போது?

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உதகையில் செயல்பட்டு வந்த ஓடுதள சீரமைப்புப் பணிகள் முழுமையாக

ஏ. பேட்ரிக்

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உதகையில் செயல்பட்டு வந்த ஓடுதள சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விளையாட்டு  வீரர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
 உதகையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட  திறந்தவெளி அரங்கம் செயல்பட்டு வருகிறது.  இங்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளுக்காகப்  புல்தரையும்,  தடகளப் போட்டிகளுக்காக  ஓடுதளமும் அமைக்கப்பட்டுள்ளன.  இவை தவிர, நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களும்,  விளையாட்டுத் துறையில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்பவர்களும் இம்மைதானத்தையே பயன்படுத்தி வந்தனர்.
  மண்தரையாக இருந்த ஓடுதளம்  10 ஆண்டுகளுக்கு  முன்னர் நிலக்கரித் தூளால் நிரப்பப்பட்ட "சின்டரிங்' ஓடுதளமாக மாற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து,  மத்திய  அரசின்  நிதியுதவியுடனும்,  மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடனும்  ரூ.  7 கோடி செலவில் செயற்கை ஒடுதளமாக (சிந்தெடிக் டிராக்) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு,  அதற்கான பணிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கின.
 செப்டம்பரில் இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.  பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன;  10 மாதத்துக்குள் பணிகள் நிறைவேற்றப்பட்டு,  ஓராண்டுக்குள் மைதானத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்க  வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
 ஆனால்,  தற்போது 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த மைதானத்தில் இன்னமும் 50 சதவீத பணிகள் கூட முழுமை அடையாமல் உள்ளன.  கடந்த ஆண்டு  உதகையில் நிலவிய காலநிலை,  மணல் தட்டுப்பாடு,  தொழில்நுட்பப் பணியாளர் பற்றாக்குறை என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன.  
 இதனிடையே மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்  மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, தற்போது சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.  
 மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டமாக இருந்த வரை ஐஏஎஸ் அல்லாத அதிகாரிகளும், உயரதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால்,  சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டமாக மாற்றப்பட்ட பின்னர் ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்ற  உத்தரவு செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட  இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரியான அமர் குஷ்வா  பொறுப்பேற்றுள்ளார்.  
 இவரது கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி மலைப் பகுதிகள் உள்ள திருப்பூர்,  கோவை,  ஈரோடு மாவட்டங்களும் வருவதால், இவர் 4 மாவட்டங்களுக்கான அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார்.  
 இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நிலக்கரித் தூளால் அமைக்கப்பட்ட  "சின்டரிங்'  தளம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதால் இதைப் பயிற்சிக்காகவும் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 சர்வதேச அளவில் இந்தியா தடகளத்தில் தற்போது தனி முத்திரை பதித்து வரும் நிலையில் உதகை மைதானத்தின் நிலை வருத்தமளிக்கிறது.  மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் "ஹை ஆல்டிட்யூட்' பயிற்சிக்காக  உதகை வந்து சென்றவர்கள் மட்டுமின்றி, தற்போது இம் மைதான வளாகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வருபவர்களும்,  பயிற்சிக்காக இங்கு வரவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட  இயக்குநர் அமர் குஷ்வாவிடம் கேட்டபோது,  திட்டம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 பெங்களூருவை சேர்ந்த அந்நிறுவனத்திடம் கேட்டபோது,  தங்களுக்கு அரசின் சார்பில்  வரவேண்டிய பணம் முழுமையாக வராததால்தான் பணிகளை நிறுத்தியுள்ளதாகவும்,  பணம் வந்தவுடன் அடுத்த 6 மாதங்களுக்குள் பணியை நிறைவேற்றி விட முடியும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால்,  தடகள வீரர்கள் கூறுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் பயிற்சிக்காக இருந்த ஒரே புல்தரை மைதானமும் தற்போது பாழ்பட்டுக் கிடக்கிறது.  இதை நாங்கள் உயரதிகாரிகளிடம் நேரடியாகக்  கூற முடியாத நிலை உள்ளது.   தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய மாவட்ட  ஆட்சியர் இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தடகளப் பயிற்சி மேற்கொள்பவர்களில் இருந்து,  நடைப் பயிற்சி மேற்கொள்வோர் வரை அனைத்துத் தரப்பினரும் வயது வித்தியாசம் இன்றிப் பயன்படுத்திய ஒரு மைதானம்,  மேம்பாட்டுக்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும்கூட, முழுமையாக பணிகள் முடிக்கப்படாமல் புல்மேடாகக் காட்சியளிப்பது அனைவரையும் வருத்தத்துக்கு  உள்ளாக்கியுள்ளது.
 இப்பிரச்னையில் புதிய மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT