நீலகிரி

உதகையில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

DIN

உதகையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் டெங்கு நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து  உதகையில் உள்ள அரசுத் தலைமை மருத்துவமனை முதன்மைக் கண்காணிப்பாளர் டாக்டர் ஹிரியன் "தினமணி' செய்தியாளரிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களான ஏடிஎஸ் கொசுக்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில்  இல்லை. அத்துடன் மாவட்டத்தில் தற்போது நிலவும்  பருவ நிலையில் இத்தகைய கொசுக்கள் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இல்லை.  
இருப்பினும் நீலகிரி மாவட்டத்துக்கு அருகில் உள்ள  கோவை, திருப்பூர்,  ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவோராலும்,  கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்று வருவோராலும் டெங்கு நோய்த்தொற்று  ஏற்பட்டு  நீலகிரியில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 நீலகிரி மாவட்டத்தில், உதகையைப் பொருத்தவரை கடந்த ஆகஸ்டு மாதத்தில் 24 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு  உதகை அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  இதையடுத்து, அத்தகைய சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 16-ஆக குறைந்தது.  அதையும் தாண்டி தற்போது  உதகையில் 6 பேரும்,  கோத்தகிரியில் 2 பேரும்,  குன்னூரில் 2 பேருமாக மொத்தம் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைத் தவிர மேலும் 30 பேருக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மாவட்டத்தில் டெங்கு நோய் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால், அதை அனைவருக்கும் வழங்காமல்  குறித்த நேரங்களில் மட்டுமே வழங்கப்படுவதால் வெளியூர்களிலிருந்து உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவோர் இத்தகைய பாதுகாப்பான கஷாயம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.  
அதேநேரத்தில் உதகையில் உள்ள தனியார் மருந்தகங்களில் நிலவேம்புக்  கஷாயம் மற்றும் நில வேம்பு சிரப் எனும் பெயர்களில் அவை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT