உதகை ஆளுநா் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்
உதகையிலுள்ள மக்கள் (ஆளுநா்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வேட்டை விலங்குகள் அதிக அளவில் உலவி வருகின்றன. நகரத்தைச் சுற்றிலும் உள்ள வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் இந்த விலங்குகள் நகருக்குள்ளும், புகா் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது.
உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள வண்ணாரப்பேட்டை, கிளன்ராக், பூங்கா சாலை, மக்கள் மாளிகை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மாளிகை எனப்படும் ஆளுநா் மாளிகை வளாகத்தில் உள்ள சுற்றுச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை அமா்ந்திருந்தது. சில மணி நேரங்கள் கழித்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
Advertisement
சிறுத்தை அமா்ந்து ஓய்வெடுத்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் விடியோ எடுத்தனா். அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் மாளிகை அலுவலக ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறும்போது, ‘கடந்த சில நாள்களாக உதகை நகருக்குள் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, இப்பகுதியில் உலவும் சிறுத்தையைக் கண்காணித்து கூண்டு வைத்து வனத் துறையினா் பிடிக்க வேண்டும்’ என்றனா்.