கேபிள் டி.வி. தொழிலுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும்: கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு
கேபிள் டி.வி. தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்
கேபிள் டி.வி. தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். திருப்பூர், வெள்ளியங்காடு, திருக்குமரன் நகரைச் சேர்ந்த கே.பூங்கொடி ஆட்சியரிடம் மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த நானும், எனது கணவர் சுந்தரமும் (42) கடந்த 20 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறோம். எனது கணவர் பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டும், வாய்பேச முடியாத நிலையிலும் உள்ளனர். எனவே, எனது கணவர் மருத்துவ செலவுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கேபிள் டி.வி. தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு: கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து, எஸ்.பிரகாஷ் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியுள் ளதாவது:
மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ள சந்தாதாரர்களே கட்டண சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் முறையினால் ஏற்படும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். கேபிள் டி.வி. தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைப் பட்டா கோரி வெள்ளக்கோவில் பொதுமக்கள் மனு: வெள்ளகோவில் அருகே தீத்தாம்பாளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மேற்கண்ட இடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டகுடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அனைவரும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மனு: இது தொடர்பாக பெருமாபாளையம் ஊர் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: சாமளாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பெருமாபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ஏமாந்தவர் மனு...: இது குறித்து திருப்பூர், விஜயாபுரம் பகுதியில் மின் சாதனைகள் விற்பனைக் கடை நடத்தி வரும் காஜா மொய்தீன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
யூ டியூப் சேனைலை பார்த்தபோது எல்இடி பல்பு தயாரித்து விற்பனை செய்வது குறித்த விளம்பரம் ஒளிபரப்பாகியிருந்து. அதில், எனது செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தேன். அப்போது, இந்தியா.காம் என்ற இணையம் வாயிலாக புதுதில்லியைச் சேர்ந்த அபி எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். அப்போது எல்இடி பல்புகளை தயாரிக்க மூலப் பொருள்கள், இயந்திரம் தருவதாகவும், தயாரிக்கும் பல்புகளையும் தாங்களே விலைக்கு எடுத்துக் கொள்வதாகவும், இதற்கு ரூ. 60 ஆயிரம் முன் தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதை உண்மை என்று நம்பி ரூ. 5 ஆயிரத்தை முதலில் செலுத்தினேன். அந்த நிறுவனத்தினர் 200 பல்புகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்கள், சிறிய இயந்திரத்தையும் அனுப்பிவைத்தனர். இதன்பிறகு நான் ரூ. 55 ஆயிரத்தை செலுத்தினேன். ஆனால், இத்தொகைக்கான மூலப் பொருள்களைத் தராமல் மோசடி செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.