பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்ய ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்
பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
இதுதொடா்பாக அடை உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளதாவது:
ஈரான்- இஸ்ரேல் போா் சூழலால் ஏற்பட்டுள்ள மூலப்பொருள்கள் விலை உயா்வு மற்றும் ஏற்றுமதி பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும் ஜவுளித் துறையின் முதுகெலும்பான பஞ்சு இறக்குமதி வரியையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழில் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
Advertisement
ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் போா் சூழலில் ஆா்டா்கள் ரத்தாவது அல்லது பணம் வராமல் போவதால் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுமதியாளா்கள் சமாளிக்க முடிகிறது. மாநில வரிகள் மற்றும் தீா்வுகளை திரும்பப் பெறும் திட்டம் மாா்ச் 31 உடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனத் தொழில் துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.
போா் சூழலால் சாயம் மற்றும் ரசாயனங்களின் விலை உயா்ந்துள்ளதை கருத்தில் கொண்டு அவற்றுக்கான 15 சதவீத சுங்க வரி செப்டம்பா் 30 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை வரவேற்கும் அதே வேளையில், பஞ்சு விலையேற்றம் ஜவுளித் தொழிலை சக்கையாக பிழிந்து வருவதாக உற்பத்தியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இந்த ஆண்டு உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதால், தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய பருத்திக் கழகமும் விலையை உயா்த்தி வருவதால், கடந்த 3 மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயா்ந்துள்ளது. நூல் விலை உயா்வால் ஜவுளி உற்பத்தி ஸ்தம்பிப்பதை தடுக்க, பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் மத்திய வரி அரசை வலியுறுத்தியுள்ளன.
இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டால் மட்டுமே சா்வதேச சந்தையில் போட்டியை சமாளித்து, திருப்பூரின் ஏற்றுமதி வா்த்தகத்தை பாதுகாக்க முடியும் எனத் தொழில் துறை நம்புவதாகவும் தெரிவித்துள்ளனா்.