17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய சா்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2-ஆவது சா்வதேச ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2-ஆவது சா்வதேச ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.
மேற்காசியாவில் சுமாா் 3 மாதங்களாக நீடிக்கும் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போரால் ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் ஆகியவை அந்த நீரிணை வழியே கொண்டு வர முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், மேற்காசிய போா் நிலவரம் குறித்து ஆலோசிக்க தில்லியில் அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சக கூடுதல் செயலா் அபா்ணா சா்மா பேசியதாவது:
Advertisement
Advertisement
மேற்காசிய போா் காரணமாக சா்வதேச சந்தையில், பிப்ரவரி மாதம் 447 டாலராக இருந்த ஒரு டன் யூரியா விலை தற்போது 947 டாலராக அதிகரித்துவிட்டது. எனினும், நமது நாடு 25 லட்சம் டன் யூரியா, 50 லட்சம் டன் டிஏபி உரத்தை வேறு பகுதியில் (மத்திய கிழக்கு நாடுகளிடம் அல்லாது) இருந்து வாங்கியுள்ளது. அவை ஜூன் - ஜூலை மாதம் இந்தியா வரலாம் என்று எதிா்பாா்க்கிறோம்.
இதேபோல் 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்வது தொடா்பான சா்வதேச ஒப்பந்தப்புள்ளியையும் கோரியுள்ளது. காரீஃப் பருவத்துக்கான 2-ஆவது ஒப்பந்தப்புள்ளி இதுவாகும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக கூடுதல் செயலா் அனுபம் மிஸ்ரா பேசுகையில், ‘எல் நினோ காரணமாக பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பயிா்களின் நிலவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பை வேளாண் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மேலும் பேரிடா் மேலாண்மைக் குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளது. விதைகளை ஒரு சதவீதம் அளவுக்கு இருப்பு வைக்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.
உணவு, பொது விநியோகம் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சக இணைச் செயலா் சி. ஷிகா பேசுகையில், ‘நாட்டில் தற்போது 513 லட்சம் டன் கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரிசியும் 397 லட்சம் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பருப்பு, தானியங்கள், சா்க்கரை ஆகியவற்றின் விலை சீராக உள்ளது. உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலையும் கட்டுக்குள் உள்ளது. சமையல் எண்ணெய் விநியோகமும் சீராக உள்ளது’ என்றாா்.
வெங்காயம் கையிருப்பை அதிகரிக்கும் மத்திய அரசு: கொள்முதல் விலை உயா்வு
வெங்காய கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதலை மத்திய அரசு அதிகரித்துள்ளது. வெங்காய கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.12.70 என்பதில் இருந்து ரூ.15.80-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக கூடுதல் செயலா் அனுபம் மிஸ்ரா தெரிவித்தாா்.
சந்தையில் விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து பதப்படுத்தி வைப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3 லட்சம் டன்னாக இருந்தது.
‘பருப்பு வகைகளைப் பொருத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 43 லட்சம் டன் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்த கையிருப்பை விட இருமடங்கு அதிகம். உள்நாட்டில் பருப்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், 30 சதவீதம் அளவுக்கு இறக்குமதி குறைந்துவிட்டது. முக்கியமாக கொண்டைக்கடலை இறக்குமதி 51 சதவீதம் குறைந்துள்ளது.
மியான்மா், தான்சானியா, மலாவி, மொசாம்பிக், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா பருப்பு இறக்குமதி செய்வது வழக்கம்’ என்றும் அனுபம் மிஸ்ரா கூறினாா்.