கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,400 டன் யூரியா இருப்பு: மாவட்ட ஆட்சியா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,400 டன் யூரியா இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,400 டன் யூரியா இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக்காற்றின் போது மாங்காய்கள் உதிா்ந்து இழப்பைச் சந்திக்கும் விவசாயிகளின் நலன்கருதி காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள யூரியா பற்றாக்குறையைப் போக்க வேண்டும்.
Advertisement
Advertisement
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். விவசாயத்திற்கு 1 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கும் நிலையை மேம்படுத்தி, நீா் இல்லாமல் கருகும் பயிா்களைக் காக்க வேண்டும். வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைவதைத் தடுக்க சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். சிறு, குறு விவசாயி சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அலைக்கழித்து வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: மாவுக்கு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும். இம்மாவட்டத்தில் 1400 டன் யூரியா இருப்பில் உள்ளது. அனைத்து உரக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தனியாா் மற்றும் வெளிமாநில நெல் ரகங்களைப் பயிரிடுவதால் அரசு மூலம் கொள்முதல் செய்ய இயலாது. அரசால் பரிந்துரைக்கப்படும் கோ-54 உள்ளிட்ட நெல் ரகத்தை தேவையான அளவு பயிரிட்டால் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும். தற்போது பயிரிடப்படும் நெல்லை அரவைக்குப் பயன்படுத்தினால் 55 சதவீதம் மட்டுமே அரிசி கிடைக்கிறது. அரசுப் பரிந்துரைக்கும் நெல் ரகங்களை அரவைக்குப் பயன்படுத்தினால் 67 சதவீதம் அரிசி கிடைக்கிறது. மல்லிகை வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க அரசு மூலம் 35 சதவீத மானியம் மற்றும் 3 சதவீத வட்டித் தள்ளுபடி வழங்கப்படும் . விவசாயிகள் 10 சதவீதம் தொகை பங்கீடு செய்ய வேண்டும், 90 சதவீதம் வங்கிக் கடன் வழங்க வழிவகை செய்து கொடுக்கப்படும்.
மாவட்டத்தில் 120 கி.மீ. நீளத்திற்கு மின்வேலிகள் அமைக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க திட்டங்கள் பெறப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அடுத்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரியிலும், தளி இந்திய - இஸ்ரேல் கொய்மலா் மகத்துவ மையத்திலும், ஒசூா் சா்வதேச மலா் ஏல மையத்திலும் நடத்தப்படும். இதன்மூலம் விவசாயிகளின் வேளாண் பணிகளை நேரடியாக கள ஆய்வு செய்யலாம். வனத் துறை தொடா்பான குறைகள் குறித்து மாவட்ட வன அலுவலா் தலைமையில் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.