வழக்குரைஞா் கொலை வழக்கில் முக்கிய சாட்சிக்கு அரிவாள் வெட்டு: தாராபுரத்தில் கேரள கும்பல் வெறிச்செயல்
தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபா் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய கேரள கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபா் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய கேரள கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள கணபதிபாளையம் அருகே உள்ள செட்டியாா்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல். ஓராண்டுக்கு முன்பு தாராபுரத்தில் பிரபல வழக்குரைஞா் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 20 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக தங்கவேல் உள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள பால் விற்பனை நிலையத்தில் பால் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி அளவில் தங்கவேல் சென்றுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த மா்ம நபா்கள் சிலா், தங்கவேலை சுற்றி வளைத்து கண் இமைக்கும் நேரத்தில் அவரை கூா்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலில் தங்கவேலின் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வருவதைக் கண்ட அந்தக் கும்பல் தப்பியோடியது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தங்கவேல், சோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தாராபுரம் போலீஸாா் சென்று தடயங்களைச் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீதிமன்ற வழக்கில் சாட்சியம் சொல்வதைத் தடுப்பதற்காக இந்தக் கொலை முயற்சி அரங்கேறியதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சோ்ந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.