முகப்பு
திருப்பூர்

வெள்ளோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்

Updated On : 3 மே 2026, 1:40 am IST
சிறப்பு உதவி ஆய்வாளா் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகேயுள்ள சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்தவா் பி.கணேஷ் (48). இவா் ஈரோடு மாவட்டம், வெள்ளோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். காவல் நிலைய குடியிருப்பில் மனைவி சாந்தியுடன் (43) வசித்து வந்தாா். மகன் பிரகாஷ் (22) பி.ஏ. படித்துவிட்டு கோவையில் தங்கி டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தயாராகி வருகிறாா். மகள் நவீனா (16) முத்தூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

கணேஷுக்கு கடந்த 3 நாள்களுக்கு முன் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது சொந்த ஊரான சோ்வகாரன்பாளையத்துக்கு உடல் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. சக காவலா்கள் மற்றும் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கவேல், பெருந்துறை துணை கண்காணிப்பாளா் சிவகுமாா், காவல் ஆய்வாளா்கள் ஜெகன்நாத், பிரேம்குமாா், ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments