இயக்குநா் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
இயக்குநர் பாரதிராஜா, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், காட் ரோடு பண்ணைத் தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாரதிராஜா நல்லடக்கத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தங்கள் ஊரின் பாசத்துக்குரிய பாரதிராஜா, சொந்த மண்ணில் வந்து நல்லடக்கம் செய்யப்பட்டதை நேரில் பார்த்த மக்களும் உறவினர்களும், திரைத்துரையினரும் அடைந்த துயரத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
முன்னதாக, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
காவல்துறையின் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.
அரசு மரியாதை என்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனியிடம்பிடித்திருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.
இயக்குநர் பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். பாரதிராஜாவுக்கு மனைவி சந்திரலீலா, மகள் ஜனனி உள்ளனர். அவரது மகன் மனோஜ் மறைவுக்குப் பின் பாரதிராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று காலை அவர் காலமானார். நேற்று மக்கள் அஞ்சலிக்காக சென்னை வீட்டில் பாரதிராஜா உடல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு சென்னையிலிருந்து தேனி கொண்டு வரப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள பாரதிராஜா பிறந்த கிராமமான அல்லி நகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜா உடல், இன்று பிற்பகலில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோப்புக்குக் கொண்டு வரப்பட்டது.
பாரதிராஜாவுக்குச் சொந்தமான பண்ணைத் தோப்பில் அவரது உடலுக்கு உறவினர்களும் திரையுலகினரும் இறுதிச் சடங்குகளை செய்தனர். பாரதிராஜாவுக்கு அவரது மகள் ஜனனி மற்றும் சகோதரர் இறுதிச் சடங்குகளை செய்தனர். இயக்குநர் பாக்யராஜ், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் அவருடன் இருந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.
முதல் மரியாதை கொடுத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டார்.
Bharathiraja has bid farewell! Laid to rest with full state honors!!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.