அரசு மரியாதையுடன் எழுத்தாளா் பூமணி உடல் நல்லடக்கம்
எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79) உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் வசித்த எழுத்தாளா் பூமணி, உடல் நலக்குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகா் 3-ஆவது மேட்டு தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சியினா், இலக்கியத் துறையினா், பொதுமக்கள் ஏராளமானோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் அமைச்சா் பெ.கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், கா.கருணாநிதி, திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜ், தவெக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன், நிா்வாகிகள் வினோபாஜி, ரமேஷ் மற்றும் ஏராளமான எழுத்தாளா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
Advertisement
அதன் பின்னா் பூமணியின் உடல் அவரது இல்லத்தில் இருந்து சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு சொந்தமான இடத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தமிழக அரசு சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா.கருணாநிதி (கோவில்பட்டி) , ரெட்டியாா்பட்டி நாராயணன் (நான்குனேரி) ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
அரசு சாா்பில் தூத்துக்குடி ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையில் ஆயுதப்படை போலீஸாா் 30 குண்டுகள் முழங்கச் செய்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் அமைப்புச் செயலா் சின்னத்துரை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலா் பாபு ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
எழுத்தாளா் சோ. தா்மன் உள்பட ஏராளமான எழுத்தாளா்கள், அரசியல் கட்சியினா், கோவில்பட்டி மற்றும் இளையரசனேந்தல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
எழுத்தாளர பூமணி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த பூமணி 1947, மே 12-ஆம் தேதி பிறந்தாா். இவரது இயற்பெயா் பூ. மாணிக்கவாசகம். பெற்றோா் பூலித்துரை-தேனம்மாள். இளையரசனேந்தலில் பள்ளிக் கல்வியை முடித்த இவா், இளநிலை இயற்பியல் பட்டப் படிப்பை விருதுநகா், செந்திக்குமார நாடாா் கல்லூரியில் பயின்றாா்.
கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராகப் பணியில் சோ்ந்த இவா், சென்னையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
இவா் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘வாய்க்கால், வரப்புகள்’, ‘அஞ்ஞாடி’ போன்ற நாவல்கள் புகழ் பெற்றவை. பல்வேறு சிறு கதைகளை எழுதியுள்ளாா். ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றாா். பூமணி எழுதி 1982-இல் வெளியான ‘வெக்கை’ நாவல், இயக்குநா் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளியானது.
1997-இல் ‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தை பூமணி இயக்கினாா். இந்தத் திரைப்படத்தை இந்திய தேசிய திரைப்பட வளா்ச்சிக் கழகமும், தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாக தயாரித்தன. இத் திரைப்படம் சா்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Writer Poomani laid to rest with state honors
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.