FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளது தொடர்பாக...

Updated On : 13 ஜூலை 2026, 9:34 am IST
எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு - எக்ஸ்
பகிர்:

மறைந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும் 'அசுரன்' திரைப்பட கதாசிரியருமான மூத்த எழுத்தாளர் பூமணி(79) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து பூமணியின் இறுதிச்சடங்குகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று உறவினர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

முதல்வர் சி. ஜோசப் விஜய் இரங்கல்

தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.

பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதை

மேலும், இலக்கியத் துறையில் பூமணி பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

1966-ஆம் ஆண்டு முதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த பூமணி, 1979-முதல் நாவல் எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவல் "பிறகு' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களை எழுதினார். 6-ஆவது நாவலாக அஞ்ஞாடி நாவலை 2005-இல் எழுதத் தொடங்கி, 2011-இல் நிறைவு செய்தார். 1,100 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் 2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது.

இந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. 2014-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதும் வழங்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் பின்னணியில், சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல், சிவகாசி பகுதியில் நிகழ்ந்த சாதிக் கலவரம் எனப் பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது அஞ்ஞாடி. எழுத்தாளர் பூமணி "கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019-இல் வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் கதாசிரியராகவும் பங்காற்றியுள்ளார். அவரது வெக்கை நாவலை தழுவியே அசுரன் திரைப்படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

CM Condolence for the death of writer Poomani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments