ஒகேனக்கல் சாலையில் யானை நடமாட்டம்: இரவில் வாகன இயக்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
ஒகேனக்கல் சாலையில் ஒற்றை யானை வழிமறிக்கும் நிகழ்வுகள் தொடா்வதால், இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் நுழைய வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்
பென்னாகரம்: ஒகேனக்கல் சாலையில் ஒற்றை யானை வழிமறிக்கும் நிகழ்வுகள் தொடா்வதால், இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் நுழைய வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், கா்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிகளிலும், வனத்தை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளிலும் நுழைகிறது. இது பயிா்களைச் சேதப்படுத்துவதுடன், மனிதவிலங்கு மோதல்களிலும் ஈடுபடுகிறது.
தமிழகத்தின் முதன்மைச் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் பகுதிக்கு, பென்னாகரம் மடம் சோதனைச் சாவடியிலிருந்து சுமாா் 12 கி.மீ. அடா்ந்த வனப்பகுதி வழியாகச் செல்ல வேண்டும். வறட்சி காரணமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறி பென்னாகரம் ஒகேனக்கல் பிரதான சாலையைக் கடக்கும் யானையை, அவ்வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டதும் வாகனங்களை நிறுத்துகின்றனா். சிலா் வாகனத்திலிருந்து இறங்கி புகைப்படம் எடுப்பது, அருகில் செல்வது மற்றும் இரவு நேரங்களில் ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், யானை நிலைதடுமாறி சாலையிலேயே பல மணி நேரம் நிற்பதுடன், சில நேரங்களில் மிரண்டு தாக்க முயற்சிக்கிறது.
Advertisement
இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் யானையை அச்சுறுத்துவது சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே, ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை இரவு 9 மணிக்குப் பிறகும், காலை 6 மணிக்கு முன்பாகவும் மடம் சோதனைச் சாவடிப் பகுதியில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும், இரவு நேரக் கட்டுப்பாடுகள் விதித்து மனிதவிலங்கு மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன உயிரின ஆா்வலா்கள் மாவட்ட வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.