தருமபுரி நகருக்குள் இரவு நேரங்களில் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதி
தருமபுரி நகருக்குள் இரவு நேரங்களில் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதி
தருமபுரி நகருக்குள் இரவு நேரங்களில் புகரப் பேருந்துகள் போதிய அளவில் வராததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தருமபுரி புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு அங்கிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மக்களின் வலியுறுத்தலுக்கு இணங்க, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் வழித்தட பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலத்திலிருந்து தருமபுரி வரும் பேருந்துகள் அனைத்தும் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, ஒட்டப்பட்டி, தடங்கம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டன. இதனால், இரவு நேரங்களில் தருமபுரி ஆட்சியா் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், நெசவாளா் நகா், நான்குமுனைச் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் இரவு நேரங்களில் தவித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சேலத்திலிருந்து தருமபுரி வரும் புகரப் பேருந்துகள் அனைத்து, இரவு நேரங்களில் தருமபுரி நகருக்குள் வந்துசெல்ல வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம், இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை அனைத்து புகரப் பேருந்துகளும் தருமபுரி நேதாஜி புறவழிச்சாலை வழியாக வந்து பயணிகளை இறக்கிவிட்டு, நான்குமுனைச் சாலை சந்திப்பு வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு ஓரிரு நாள்கள் மட்டும் அமலப்படுத்தப்பட்டு, அனைத்து பேருந்துகளும் நகருக்குள் வந்து சென்றன. கடந்த சில நாள்களாக பெரும்பாலான பேருந்துகள் நகருக்குள் வராமல் இரவு நேரங்களில் ஒட்டப்பட்டியிலிருந்து தடங்கம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்து வருகின்றன. அதேபோல நகருக்குள் வரும் ஓரிரு பேருந்துகளும் காலை 6 மணிக்கு மீண்டும் புறவழிச்சாலை வழியாக இயங்கப்படுகின்றன.
எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை முற்றாக பின்பற்றும் வகையில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அதேபோல இரவு நேரங்களில் பேருந்துகள் நகருக்குள் வந்துசெல்வதை உறுதிப்படுத்திடும் வகையில் போக்குவரத்து பிரிவு அலுவலா்கள் உரிய சோதனை நடத்த வேண்டும் என பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.