தருமபுரி

கொல்லிமலை மலைவாழ் உண்டு, உறைவிடப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வி பாதிப்பு?

ராசிபுரம், ஜன. 18: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியின் மேல்நிலை வகுப்பில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.  மலைப்பிரதேசங்களில் உள்ள

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

ராசிபுரம், ஜன. 18: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியின் மேல்நிலை வகுப்பில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

 மலைப்பிரதேசங்களில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மலைவாழ் பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதாரம் பாதிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகள் எழுந்திருப்பது மாணவர்களின் கல்வித்தரத்தை பெரிதளவில் பாதித்துள்ளது.

 நாமக்கல் தாலுக்காவின் 7 ஊராட்சிகள், ராசிபுரம் தாலுக்காவின் 7 ஊராட்சிகள் என மொத்தம் 14 ஊராட்சிகளை உள்ளடக்கியது கொல்லிமலை. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கொல்லிமலையில் 9 அரசு நடுநிலைப்பள்ளிகள், 3 மேல்நிலைப்பள்ளிகள், 2 தனியார் பள்ளிகள் உள்ளன.

 இதில் தெம்பளம், வாழவந்திநாடு, செங்கரை ஆகிய இடங்களில் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. மலையின் 10 கி.மீ., சுற்று வட்டாரத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். பஸ் வசதிகள் இருந்தாலும், சில கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு நீண்டதூரம் நடந்துதான் செல்கின்றனர்.

 இந்நிலையில், கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி உண்டு உறைவிடப் பழங்குடியின அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பயின்று வருகின்றனர். 32 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இப்பள்ளியில் தற்போது 14 ஆசிரியர்களே உள்ளனர். இந்த 18 ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கொல்லிமலைப் பகுதியில் வாழும் படித்த பட்டதாரி இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தீரவில்லை.

 குறிப்பாக, மேல்நிலை வகுப்பில் அதிக அளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். அடுத்த மாதத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை, பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தங்களின் கல்வி பாதிக்கும் என்கின்றனர் பள்ளி மாணவர்கள்.

 ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள் என்ற நிலை மாறி, 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணிணி என பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்கின்றனர் மாணவர்கள்.

 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கூறும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜூ, ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்படைவதுடன், மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது என்றார்.

 இது ஒருபுறம் இருக்க, உறைவிடப்பள்ளியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் விடுதியில் தண்ணீர், சுகாதாரம் பற்றாக்குறை உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த அவலநிலையை போக்கி, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான பஸ் வசதி செய்துதர வேண்டும் என்கிறார் நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் கூட்டமைப்புத் தலைவர் ஏ.டி.கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT