தருமபுரி

சிப்காட் தொழிற்பேட்டை: இந்தத் தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து பிரசாரம்

தருமபுரியில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வரும் நிலையில்,  நீண்ட நாள் கோரிக்கையான சிப்காட் தொழிற்பேட்டை

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரியில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வரும் நிலையில்,  நீண்ட நாள் கோரிக்கையான சிப்காட் தொழிற்பேட்டை தருமபுரியில் அமைக்கப்படும் என திமுக, பாமக, அமமுக வேட்பாளர்கள் இந்தத்  தேர்தலிலும் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்து வருகின்றனர். 
அதேவேளையில் இந்த முறையாவது சொந்த மண்ணில் வேலைவாய்ப்புக் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள் உள்ளனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் தருமபுரி, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் மேட்டூர் ஆகிய பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் மேட்டூரை தவிர்த்து,  மீதமுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளும் தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளன.  இந்த 5 தொகுதிகளிலும் மொத்தம் 11,96,406 வாக்காளர்கள் உள்ளனர்.
 தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை வேலைவாய்ப்புகள் பெரிதும் இல்லாத மாவட்டமாகும். அதேபோல, மேட்டு நிலத்தைக் கொண்டுள்ள பெரும் பகுதி விவசாயிகள், பருவமழையை நம்பி மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர்.  விவசாயத்தில் வருவாய்க் கிடைக்காத சூழலில் விவசாயிகள்,  தொழிலாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.
மற்றொருபுறம் தருமபுரி மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டத்துக்கு ஒரு கல்லூரி என கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து வருவாய் வட்டங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும்,  இக் கல்லூரிகளிலிருந்து கல்வி முடித்து வெளியேறும் இளைஞர்கள், பள்ளிக் கல்வி மற்றும் தொழில் கல்வி முடித்த இளைஞர்கள், பள்ளிகளில் இடை நின்றவர்கள் என அனைத்து நிலையில் உள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால்,  வேலைவாய்ப்புத் தேடி, கல்வி முடித்த கையேடு ஒசூர், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் கடந்த பல ஆண்டுகளாகத் தொடருகிறது.
இதில்,  குறிப்பாக, பெங்களூரு மாநகரத்தில் மட்டும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், ஆந்திர மாநிலம், கர்நாடகம் உள்ளிட்ட இடங்களில் குவாரிகளிலும், செங்கல் சூளைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏறக்குறைய 2 லட்சம் பேர் வேலைவாய்ப்புத் தேடி வெளியூர்களில் தங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
 இந் நிலை மாறி தருமபுரியிலேயே தொழில்பேட்டைகள் அமைத்து தங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என இந்த மாவட்ட மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.  கடந்த 2011-இல் தருமபுரி மாவட்டத்தில் 1,784 ஏக்கரில் அதியமான்கோட்டை அருகே சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதேபோல,  பென்னாகரம் பருவதனஅள்ளி மற்றும் அரூர் பகுதியில் சிட்கோ தொழில்பேட்டைகள் அறிவித்து,  இடமும் கையகப்படுத்தப்பட்டு பெயர் பலகையும் வைக்கப்பட்டன.  ஆனால்,  தற்போது வரை இவ்விரு சிட்கோ தொழில்பேட்டைகளிலும் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை.  தருமபுரி சிப்காட் தொழில்பேட்டைக்கு மட்டும் 1,200 ஏக்கர் நிலம் அரசு வசம் உள்ளதாகவும்,  மீதமுள்ள 584 ஏக்கர் பட்டா நிலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்புக்காக ஏங்குகிற மக்களின் கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக நிறைவேறாமாலேயே உள்ளது.  இருப்பினும், கடந்த 2011 மற்றும் 2016 சட்டப் பேரவைத் தேர்தலின்போதும்,  2014 மக்களவைத் தேர்தலின்போதும் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொழில்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதிகளை அளித்தனர்.
2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸ் சிப்காட் தொழில்பேட்டை தருமபுரியில் அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இம் முறை வேலைவாய்ப்பை உருவாக்க பன்னாட்டு நிறுவனங்களை தருமபுரிக்குக் கொண்டு வருவேன் எனவும் வாக்குறுதி அளித்து வருகிறார்.  அதேபோல, திமுக வேட்பாளர் செந்தில்குமார், அமமுக வேட்பாளர் பி.பழனியப்பன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டி. ராஜசேகர் என அனைத்து கட்சி வேட்பாளர்களும்  சிப்காட் தொழில்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பை நிச்சயம் உருவாக்குவோம் என்பதை மட்டும் முக்கிய வாக்குறுதியாக அளித்து வருகின்றனர்.
இனியாவது இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிலையை மாற்றி,  சொந்த மண்ணில் வேலைவாய்ப்பு கிடைக்க வெற்றி பெறும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT