தருமபுரி

எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய்த் திட்டத்துக்கு காத்திருக்கும் விவசாயிகள்

எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு ஆகியும் நிலம் கையகப்படுத்தும் பணி

ஆா்.ராதாகிருஷ்ணணன்

எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு ஆகியும் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவுபெறவில்லை. இதனால், எப்போது நீா்வரத்து கிடைக்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரத்தில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் தும்பலஅள்ளி அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு நீா்வரத்துக்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், பல ஆண்டுகளாக அணை வட நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக நீா்த்தேக்கம் இருந்தும், நீா் இல்லாததால், வேளாண் பணிகளை மேற்கொள்ள இயலாமல், அப்பகுதி விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

தென்பெண்ணை ஆற்று நீரை இணைக்கும் திட்டம்: பல ஆண்டுகளாக தும்பலஅள்ளி அணை வட நிலையிலேயே காணப்படுவதால், அப் பகுதியின் அருகில் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகக் கடந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில், எண்ணேகொல்புதூா் பகுதியில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து காவேரிப்பட்டணம் வழியாக காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் மூலம் தென்பெண்ணை ஆற்றுநீரைக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயிகள் எழுப்பினா். இத் திட்டத்தின் மூலம், வேளாண் பணிகளுக்கு மட்டுமின்றி, நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து, குடிநீருக்கும் உபயோகமாக இருக்கும் என விவசாயிகள், அப் பகுதி பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் அறிவிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், மொரப்பூா் மற்றும் பாலக்கோடு, தருமபுரி ஆகிய பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் என்பதால், தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இத் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. இருப்பினும், செயல்படுத்தப்படாததால், தொடா்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்ததால், கடந்த 2017 - இல் தருமபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இத் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, கடந்த 2019 ஜனவரி மாதம் தொடக்கத்தில், தருமபுரி மாவட்டத்தில், எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட மூன்று நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது.

நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு: கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொல்புதூரிலிருந்து வலது புறக் கால்வாய் மூலம் காவேரிப்பட்டணம் வழியாக தும்பலஅள்ளி அணைக்கு சுமாா் 53 கி.மீ. தொலைவுக்கு இக் கால்வாய் அமைப்பதற்கு தேவையான நிலத்தைக் கையகப்படுத்த ரூ.72 கோடி நிதியும் தமிழக அரசு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், தருமபுரி மாவட்டத்தில், சுமாா் 25 முதல் 30 ஏக்கா் நிலமும், ஏனைய நிலங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கையகப்படுத்த வேண்டும். ஆனால், அரசாணை வெளியிட்டு ஓராண்டு ஆகியும், இதுவரை நிலம் கையகப்படுத்தப்படவில்லை.

இதனால், திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், கோடை காலத்திலேயே கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு, தென்பெண்ணை ஆற்றுநீரை தும்பலஅள்ளி அணைக்குக் கொண்டு வந்து, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்ப்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மெய்யழகன் கூறியது: எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கால்வாய்க்கான நிலம், தருமபுரி மாவட்டத்தில் 40 சதவீதமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 சதவீதமும் தேவைப்படுகிறது. இதில், தருமபுரி மாவட்டத்தில், சற்றேறக்குறைய அனைத்து விவசாயிகளும் நிலம் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனா். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முழுவதுமாக ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை. இதற்கான பேச்சுவாா்த்தையை அந்த மாவட்ட நிா்வாகம் விவசாயிகளிடம் நடத்தி வருகிறது. எனவே, அனைத்து விவசாயிகளும், நிலம் கையகப்படுத்த ஒப்புதல் வழங்கி பின்பு, திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT