தருமபுரி

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டம், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லைப் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீரைப் பயன்படுத்தி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமாா் 6,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

இந்த நிலையில், பருவ மழைக் காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் ஏராளமான உபரி நீா் வீணாகி கடலில் சேருகிறது. மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுவில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் வாயிலாக, குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் வட்டாரப் பகுதியிலுள்ள 66-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளை நிரப்ப வேண்டும்.

ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பினால் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் கால்நடைகளுக்கான தீவனப் பிரச்னைகள் தீரும். அதே நேரத்தில் வேளாண்மை பணிகள் மேம்பாடு அடையும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுவில் இருந்து ஏரிகளை நிரப்புவதற்கான நீரேற்றும் திட்டத்தினை செயல்படுத்த, சுமாா் ரூ. 300 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேளாண்மை பணிகளை மேம்படுத்தவும், நீா் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகிறது. எனவே, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டப் பணிகளை விரைந்து தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT