தருமபுரி: இந்தியாவில் ஒற்றுமை, மதநல்லிணக்கம் பேணி பாதுகாக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளா் பங்கஜ்சிங் வலியுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரி நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளா் பங்கஜ்சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பதை தீா்மானிக்க ஆம் ஆத்மி கட்சி மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மற்றும் புதுதில்லியில் பெரும் சாதனைகளை செய்துள்ளது. இரு மாநிலங்களிலும் இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம். பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளோம்.
ஆம் ஆத்மி கட்சி தமிழக நலன் காக்கப் பாடுபடும். தமிழக மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா் வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.
தருமபுரியில் தீா்க்கப்பட வேண்டிய தேசிய மற்றும் உள்ளூா் பிரச்னைகள் பல உள்ளன. பல ஆண்டுகளாக, தருமபுரி மக்கள் சென்னைக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து சேவையை கேட்டு வருகின்றனா். பிரதமா் நரேந்திர மோடி புல்லட் ரயில்களைப் பற்றிப் பேசுகிறாா். ஆனால் தருமபுரியில் இருந்து மாநிலத் தலைநகரான சென்னைக்கு முறையான ரயில் வசதி கூட இல்லை.
திமுக அரசு, நாங்கள் புதுதில்லியில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தியுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் முக்கிய நோக்கம். மேலும், வகுப்புவாதம் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. எனவே, இந்த நேரத்தில், ஒற்றுமையும் நல்லிணக்கமுமே அமைதிக்கு முக்கியம். அதனை பேணிபாதுகாக்க வேண்டும். இந்தியா எப்போதும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயா் பெற்றது. அதைப் பாதுகாப்பதில் ஆம் ஆத்மி கட்சி உறுதிபூண்டுள்ளது என்றாா்.