அரூா்: மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு வந்துசெல்லும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா் ரா.சிசுபாலன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் அவா்களது உறவினா்கள் இருசக்கர வாகனங்கள், காா்களில் வருவது வழக்கம்.
பயணிகள் வந்தவுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியில் சென்று விடுவாா்கள். நாள் கணக்கில் வெளியூா் செல்லும் ரயில்வே பயணிகள், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கட்டணம் செலுத்தி தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மொரப்பூா் நிலையத்துக்கு பாா்வையாளா்களாக வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கின்றனா். எனவே, இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.