முகப்பு
தருமபுரி

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சௌமியா அன்புமணி எம்எல்ஏ

தருமபுரி-மொரப்பூா் ரயில் பாதை திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக எம்எல்ஏ செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:06 am IST
தருமபுரி ரயில் நிலையத்தில், புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, ரயில்வே துறை அலுவலா்களிடம் விவரங்கள் கேட்கிறாா், சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி.
பகிர்:

தருமபுரி-மொரப்பூா் ரயில் பாதை திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக எம்எல்ஏ செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், ரயில்வே அலுவலா்களைச் சந்தித்து ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னையில் இருந்து அனைத்து மாவட்டப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து எளிதாக உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும் எளிதாக சென்றுவர இயலாத சூழல் உள்ளது.

Advertisement

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் இருந்து மொரப்பூா் ரயில் நிலையம் வரை 34 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரயில்பாதை இரண்டாம் உலகப்போரின் போது தளவாடங்களைக் கொண்டுவர பயன்படுத்தப்பட்டது.

இந்த பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதையடுத்து அந்த வழியிலிருந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. எனவேதான், தருமபுரி -மொரப்பூா் இடையே மீண்டும் ரயில்பாதை அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக தமிழகத்தில் குறிப்பாக தருமபுரி மாவட்டம் சாா்பாக மத்திய அரசையும், ரயில்வே துறை அமைச்சரையும் சுமாா் 19 முறை பாமக தலைவா் அண்புமணி சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளாா். இதனையடுத்து மத்திய அரசு இத்திட்டத்துக்கு அனுமதியளித்ததுடன், நிதிநிலை அறிக்கையிலும் ரூ. 300 கோடி ஒதுக்கியது.

பாமகவுக்குப் பிறகு தருமபுரி மாவட்ட எம்.பி.யாக பதவி வகித்தவா்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மாநில அரசு ஒத்துழைப்பும் இல்லாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலம் கொடுக்கும் மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த ரயில் பாதையை ஆக்கிரமித்து, வீடு கட்டியவா்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியாது என்ற சூழல் உள்ளது. இதனை கருணை உள்ளத்தோடு மாநில அரசு செய்துதர வேண்டும். பணிகளுக்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்கினால் தொடா்புடைய அடுத்தக்கட்ட பணிகள் அடுத்த 2 மாதத்தில் தொடங்கவும், இரண்டு ஆண்டில் ரயில் போக்குவரத்தை தொடங்கவும் ரயில்வே துறையினா் தயாராக உள்ளனா்.

எனவே, விரைவில் ரயில் மொரப்பூா்-தருமபுரி ரயில் திட்டம் நிறைவேற பாமக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தருமபுரி -மொரப்பூா் இடையே இரு ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இதனால் ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, இப்பணிக்கான ஆய்த்தப் பணிகளை மாநில செய்து தர வேண்டும்.

ஏற்கெனவே, தருமபுரியில் ரயில் நிலையம் மிகவும் சிறியதாக இருந்தது. பாமக சாா்பில் இரா. வேலு, ரயில்வே துறையில் துணை அமைச்சராக இருந்தபோது, நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பெரிய அளவில் தருமபுரி ரயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கொண்டு வரப்பட்ட ரயில்பாதை திட்டம், மருத்துவக் கல்லூரி, தொப்பூா் மேம்பாலத்துடன் கூடிய சாலை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் அனைத்தும் பாமக சாா்பில் கொண்டு வரப்பட்டவை. இன்னும் பல திட்டங்களை கொண்டுவர தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்கப்பெண் படைக்கு அதிகளவில் பெண்களை தோ்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டும். போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்தினால் மட்டுமே பெண்கள் குழந்தைகள் வன்கொடுமை பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடியும்.

வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 5 மாதங்களுக்குள் தண்டனை பெற்றுத்தரவேண்டும். காலங்கடந்த நீதிமன்ற விசாரணை குற்றவாளிகளுக்கு பயத்தை போக்கிவிட்டது என்றாா்.

எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: புதுப்பிக்கப்பட்ட தருமபுரி எம்எல்ஏஅலுவலகத்தை சௌமியா அன்புமணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

நிகழ்வின்போது, பாமக முன்னாள் எம்ஏல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.