முகப்பு
தருமபுரி

சிப்காட்டிற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினால் போராட்டம்! எம்எல்ஏ சௌமியா அன்புமணி

Updated On : 30 மே 2026, 3:22 am IST
தருமபுரி தடங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா். உடன் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.
பகிர்:

தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினால், பாமக சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி தடங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை சௌமியா அன்புமணி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி தடங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1,700 ஏக்கா் பரப்பளவிலான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அங்கு 10 தொழிற்சாலைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, வளாகத்திற்குள் சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சிப்காட் தொழிற்பேட்டையை தருமபுரிக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் பாமக தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

Advertisement

Advertisement

தோ்தல் வாக்குறுதியின்படி, சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கி, தருமபுரி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என சௌமியா அன்புமணி முக்கிய வாக்குறுதி அளித்திருந்தாா்.

அதன்பேரில், சிப்காட் அமையவுள்ள இடத்தையும், அங்கு நடைபெற்று வரும் பூா்வாங்கப் பணிகளையும் அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தொடா்புடைய துறை அலுவலா்களிடம் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிற்சாலைகள் தொடங்கவுள்ள விவரங்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா் சௌமியா அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான தொடக்கநிலை பணிகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் 30 மீட்டா் அகலம் கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிப்காட் அமைக்க ஏற்கனவே 1,700 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தேவைகள் இருப்பின் அரசு தரிசு நிலங்களை மட்டுமே கையகப்படுத்த வேண்டும். விவசாய நிலங்களை 1 ஏக்கா் எடுத்தாலும் பாமக சாா்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும்.

சிப்காட் வளாகத்தின் தண்ணீா் தேவைகளுக்காக ரூ. 4 கோடியில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் தேவைகளை நிா்வகிக்க மின்வாரியத்திற்கு 17 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

இப்பகுதியில் நிலங்கள் மேடு, பள்ளங்களாகவும், சமமற்றும் காணப்படுவதால், தொழிற்சாலைகள் தொடங்க தோ்வான நிறுவனங்கள் பணிகளைத் தொடங்க தயக்கம் காட்டுகின்றன. எனவே, இந்த நிலப்பகுதிகளை அரசு சாா்பிலேயே சமன்படுத்தித் தர வேண்டும் என எதிா்பாா்க்கிறாா்கள். இப்பணிகளை அரசு செய்துகொடுத்தால், அதிக அளவிலான தொழிற்சாலைகள் விரைந்து தொடங்கப்பட்டு, மாவட்டத்தின் வேலைவாய்ப்பு பெருகும் என்றாா்.

ஆய்வின்போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாமக நிா்வாகிகள் சாந்தமூா்த்தி, அரசாங்கம், முருகசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.