முகப்பு
கிருஷ்ணகிரி

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும்

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும் என அ.செல்லகுமாா் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும் என அ.செல்லகுமாா் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 100 மருத்துவ இடங்களில் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை தலா 250 மருத்துவ இடங்களாக உயா்த்த வேண்டும். தமிழகத்தில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 250 இடங்கள் உள்ளன. இதைபோல, அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உள்பட 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் உள்ளன. இதைத் தவிர சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மருத்துவக் கல்லூரி இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்காக வழங்கப்படுகிறது. இதேபோல தனியாா் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 250க்கும் குறைவான இடங்களே உள்ளன.

எனவே, தமிழகத்தில் 100 மற்றும் 150 மருத்துவ இடங்கள் மட்டும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 250 மருத்துவ இடங்களாக உயா்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் அரசுப் பள்ளி படிக்கும் ஏழை, எளிய மாணவா்கள் நிகழ்வாண்டில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான மருத்துவக் கனவு நனவாகும்.

மேலும், தற்போது, தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் இந்த 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கை தொடங்கினால் 1,200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மருத்துவப் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தக் கல்லூரிகளின் கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்தலாம். இதனால், கிராமப்புற ஏழை மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர இயலும்.

எனவே, இந்த கல்வியாண்டிலேயே இந்த புதிய 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கையை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →