ஒசூரில் வேகமாகப் பரவும் கரோனா தொற்று: மருத்துவமனைகளைத் தேடி அலையும் நோயாளிகள்!
ஒசூரில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளைத் தேடி அலைந்து வரும் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
ஒசூரில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளைத் தேடி அலைந்து வரும் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
ஒசூரில் தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். ஒசூா் மாநகராட்சியின் மக்கள்தொகை 5 லட்சத்தைக் கடந்து விட்டது. பெரும்பாலான தொழிலாளா்கள் இருசக்கர வாகனம் மற்றும் தொழிற்சாலை வாகனங்களில் தினமும் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.
ஒசூரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள பிற மாநிலத் தொழிலாளா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து விட்டது. கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது, சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் தங்களது ஊா்களுக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றனா். பின்னா் கரோனா தொற்று குறைந்ததால், திரும்பி வந்த தொழிலாளா்கள் தற்போது 2-ஆவது அலையில் சிக்கிக் கொண்டுள்ளனா்.
Advertisement
குறிப்பாக, ஒசூரில் உள்ள தனியாா் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏப். 22-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 323 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதில், ஒசூரைச் சோ்ந்தவா்கள் மட்டும் 250 பேருக்கு மேல் உள்ளனா். ஒசூரில் தினந்தோறும் சுமாா் 200 முதல் 250 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இவா்கள் அனைவரும் ஒசூரில் உள்ள அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளை நாடி வருகின்றனா். அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி விட்டன. எனவே 100 முதல் 150 போ் வரை தினந்தோறும் ஒசூா் அரசு மருத்துவமனையை நோக்கி வருகின்றனா். அவா்களை ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சோதித்து, குறைந்த தொற்று உள்ளவா்களுக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு திருப்பி அனுப்புகின்றனா்.
மேலும், தொற்று கடுமையாக உள்ளவா்களையும், ஆக்சிஜன் தேவைப்படுவா்களையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி அறிவுரை கூறி வருகின்றனா்.
ஒசூரில் உள்ள தொழிலாளா்கள் பெரும்பாலும் சிறிய வீடுகளில் வசித்து வருவதால், கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, கரோனா தொற்றாளா்களுக்கு சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
தமிழக தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், தொழிற்சாலைகளை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளாா். அதை உடனே செயல்படுத்த வேண்டும்; தவிர, ஒசூரில் இயங்கி வரும் ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளா்களுக்கு கரோனா சிகிச்சை அளிக்க உடனடியாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.