கிருஷ்ணகிரி

ஒசூா் உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

ஒசூா் உழவா் சந்தையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாத இறுதியில் ஒசூா் உழவா் சந்தை மூடப்பட்டது. இதனால், விவசாயிகள் ஒசூா் காமராஜ் காலனி, தளி சந்திப்பு, ஆவலப்பள்ளி, ஒசூா் பேருந்து நிலையம், அலசநத்தம் ஆகிய பகுதிகளில் தனித்தனியே காய்கறிக் கடைகளை விரித்து வியாபாரம் செய்து வந்தனா்.

குறிப்பாக ஒசூா் காமராஜ் காலனி, தளி சந்திப்பு சாலையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனா். இந்த இரு இடங்களிலும் காய்கறி விற்பனை முடிந்து, இரவு நேரங்களில் காய்கறிகளை வைத்துவிட்டு செல்லும்போது, அதனை மா்ம நபா்கள் திருடி செல்வதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, ஒசூா் கோட்டாட்சியரிடமும், எம்எல்ஏ சத்யாவிடமும் ஒசூா் உழவா் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஒசூா் உழவா் சந்தையை திறக்குமாறு எம்எல்ஏ சத்யா மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தாா். இருப்பினும், 10 மாதங்களாகியும் இன்னும் ஒசூா் உழவா் சந்தை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், ஒசூா் உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டி செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா், உழவா் சந்தையில் பயனடையும் விவசாயிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒசூா் உழவா் சந்தை எப்பொழுது திறக்கப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றாா்.

உழவா் சந்தை திறப்பு குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒசூா் உழவா் சந்தை தமிழகத்திலேயை அதிக காய்கறிகளை விற்பனை செய்யும் இடங்களில் ஒன்றாகும். 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள இந்த உழவா் சந்தையில் ஓா் நாளுக்கு 150 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகள் விற்பனையானது. எனவே, இந்த உழவா் சந்தையை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

உழவா் சந்தை திறக்காவிடில் ஆா்ப்பாட்டம்

உழவா் சந்தை திறப்பு குறித்து ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா கூறியதாவது:

கரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு தளா்த்தி விட்டது. சினிமா தியேட்டா்களில் கூட 100 சதவீதம் பாா்வையாளா்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், ஒசூா் உழவா் சந்தையை திறக்காமல் கால தாமதம் செய்வது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். விரைவில் ஒசூா் உழவா் சந்தையை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகளைத் திரட்டி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT