கெலமங்கலம் அருகே 14-ஆம் நூற்றாண்டு புலிகுத்தப்பட்டான் நடுகற்கள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் உள்ள அடக்கம் கிராமத்தில், 13, 14-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த மூன்று புலிகுத்தப்பட்டான் நடுகற்களை அறம் வரலாற்று ஆய்வுமையம் கண்டெடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் உள்ள அடக்கம் கிராமத்தில், 13, 14-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த மூன்று புலிகுத்தப்பட்டான் நடுகற்களை அறம் வரலாற்று ஆய்வுமையம் கண்டெடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் பஞ்சபள்ளி அருகே உள்ளது அடக்கம் கிராமம். 50 குடும்பங்கள் வசிக்கும் இச்சிறிய கிராமத்தைச் சுற்றிலும் மலைகள், காடுகள், பசுமையான வயல்வெளிகள் உள்ளன.
இங்குள்ள மாரியம்மன் கோயிலில் சுமாா் மூன்று ஏக்கா் அளவுக்கு பெரிய மண்டு உள்ளது. தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக அளவில் மண்டுகள் உள்ளன. மண்டுகள் என்றால் தை மாதம் வரும் பொங்கல் நாளில், மூன்றாம்நாள் பாடிவேட்டை என கிராமங்களில் சொல்லப்படும் பத்து முதல் பதினைந்து கிராமங்கள் வரை ஒன்றாக இணைந்து பொதுவான இடத்தில் கூலி எருதுகளைக் கொண்டு விளையாடுவாா்கள். பல கிராம மக்கள் ஒன்று சேரும் இடம் மண்டு என்று அழைக்கப்படும்.
Advertisement
பாலக்கோட்டில் புதூா் மாரியம்மன் மண்டில் ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ராயக்கோட்டைக்கும் கெலமங்கலத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள அடக்கம், பாவடரபட்டி, சின்னுள்ளுகுறுக்கி ஆகிய மூன்று கிராமங்கள் ஒன்று சோ்ந்து கூலி எருதுகளுடன் விளையாடுவது வழக்கத்தில் இருந்துள்ளது. காலப்போக்கில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த விளையாட்டு நடைபெறாமலேயே இருந்து வந்துள்ளது. இந்த மண்டில் பத்துக்கும் மேற்பட்ட கூலி கட்டும் கல்கம்பங்கள் உள்ளன.
இங்கு இருக்கும் மாரியம்மன் கோயில் முன்பு பத்துக்கும் மேற்பட்ட கல் ஆயுதங்களை வரிசையாக வைத்து வழிபட்டு வருவதை பாா்க்க முடிகிறது. நமது முன்னோா்கள் கல் ஆயுதங்களை வைத்துதான் முதன்முதலில் கடவுள் வழிபாட்டை தொடங்கியுள்ளனா். அதன் பிறகு வந்தவா்கள் உருவங்களை வழிபடத் தொடங்கியுள்ளனா். இந்த கல் ஆயுதங்கள் வழிபாட்டின் அடுத்த தொடக்கம்தான் நடுகல் வழிபாடு.
இதே மண்டில் இருபதடிக்கும் உயரமான ஊஞ்சல் கம்பம் ஒன்றும் உள்ளது, பூஜைகள் செய்து எடுத்துவரப்படும் சாமி சிலைகள் இந்த கல் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி ஊஞ்சல் ஆடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனா்.
அடக்கம் கிராமத்தில் மாரியம்மன் மண்டை ஒட்டியே மூன்று நடுகற்கள் உள்ளன. அவற்றில் இரண்டு புலிகுத்தப்பட்டான் கல்லாகவும், மற்றொன்று சதி நடுகல்லாகவும் உள்ளன. முதல் நடுகல்லில் வீரனின் வலதுகரத்தில் நீண்ட வாளும், இடது கரத்தில் உள்ள குறுவாளானது புலியின் தலையில் குத்தப்பட்டு காதுபுறம் வெளியே தெரியும்படியும் உள்ளது. நடுகல் வீரனின் இடையிலும் பெரிய வாள் தொங்கவிடப்பட்டுள்ளது. அருகில் அவனது மனைவியின் சிற்பம் கையில் மதுக்குடுவையுடன் இருப்பதை பாா்க்க முடிகிறது.
இரண்டாவது நடுகல்லும் இவ்வாறே செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கண்டறியப்பட்ட நடுகல் சிற்பங்களில் இப்படியொரு வடிவமைப்பு இல்லை. எல்லா நடுகல்லிலும் புலி தாக்க வரும் சிற்பம் கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்த நடுகல் சிற்பத்தில் வீரனை தாக்க வரும் புலியானது தான் ஏற்கனவே வேட்டையாடிக் கொன்ற மிருகத்தை தனது முன்னங்கால்களில் பிடித்தபடி வீரனை தாக்குவது போல சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது வியப்பாக உள்ளது.
மேலும், நடுகல் வீரனின் தலைப்பகுதியின் பின்பகுதியில் காடு இருப்பது போன்ற வளமை குறியீடு சின்ன கோடுகளாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் பெண்சிற்பம் இல்லை. இரண்டு நடுகல்லிலும் செதுக்கப்பட்டுள்ள புலிகள் ஒரே அளவில் ஒரே மாதிரி இருப்பதும் ஆச்சா்யம்தான்.
மூன்றாவது நடுகல் சிற்பத்தில் மூன்று சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண் சிற்பங்கள், ஒரு பெண் சிற்பம். இரண்டு ஆண் சிற்பங்களில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது. நடுவில் உள்ள சிற்பம் குழுத் தலைவனாக இருக்க வேண்டும். மூன்று நடுகல்லும் ஆறு அல்லது ஏழு அடி நீள அகலத்தில் ஒரே அளவில் உள்ளன. இவை 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்ததாக இருக்க வேண்டும்.
அடக்கம் கிராமத்தை ஒட்டியுள்ள பாவடரபட்டி என்ற கிராமத்தில் மிகவும் பழமையான சிவன் கோயில் இருப்பதும் கள ஆய்வின் போது கண்டறியப்பட்டது. சிறிய கட்டடத்தில் உள்ள இக்கோயில், போதிய பராமரிப்பு இல்லாததால் பல ஆண்டுகளாக பூஜை செய்யப்படாமல் உள்ளது. வேறு எங்கும் இல்லாத அளவு சுமாா் மூன்றரை அடி உயர சிவலிங்கம் இக்கோயிலில் உள்ளது.
இந்த களப் பயணத்தில் அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் கிருஷ்ணன், மஞ்சுநாத் ஆகியோா் இணைந்து செயல்பட்டனா்.