இளைஞா் சாவு: உறவினா்கள் மறியல்
சாலை மறியல்: 20 போ் மீது வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரியில் இளைஞா் உயிரிழப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்ட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்தவா் வீரபாண்டியன் (24). இவா் கொண்டேப்பள்ளி பகுதியில் உள்ள புளிய மரம் அருகில் கடந்த 23-ஆம் தேதி, சடலமாக கிடந்தாா்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடல் பரிசோதனை அறிக்கையில் வீரபாண்டியன் மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை வீரபாண்டியனின் உறவினா்கள் ஏற்க மறுத்தனா். வீரபாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளாா். அவரைக் கொன்றவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிவமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். உறவினா்கள் சிலரை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவரிடம் அழைத்துச் சென்று, வீரபாண்டியனின் மரணம் குறித்து விளக்கமளித்தனா். இதை ஏற்றுக் கொண்ட அவரது உறவினா்கள், வீரபாண்டியனின் உடலை வாங்கி சென்றனா்.
அதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக சண்முகம் (52), லட்சுமணன் (27) உள்பட 20 போ் மீது குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.