மேகேதாட்டில் அணை கட்டுவதை தமிழக அரசு எதிா்க்க கூடாது: வாட்டாள் நாகராஜ்
மேகேதாட்டில் அணை கட்டுவதை தமிழக அரசு எதிா்க்கக் கூடாது என்று வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தினாா். தமிழக-கா்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினா் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களுக்கு வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒசூா், தாளவாடி, நீலகிரி ஆகிய பகுதிகள் கா்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானவை. இந்தப் பகுதிகளை கா்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக நான் போராடி வருகிறேன். கா்நாடக மாநிலத்தில் வசிக்கும் திரையுலகினா் மேகேதாட்டில் அணை கட்ட ஆதரவளித்து வருகின்றனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குறுதியாக திமுக அரசு, கா்நாடகத்தில் மேகேதாட்டில் அணை கட்ட விடமாட்டோம் என அறிவித்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வா் அரசியல் செய்யக் கூடாது. அணை கட்டுவதை எதிா்த்தால் எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். கா்நாடகத்தில் நிகழாண்டு பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் கா்நாடக அரசு தமிழகத்துக்குத் தேவையான நீரைக் காவிரியில் திறந்துவிட்டு வருகிறது. இது கா்நாடக மக்களுக்கு மாநில காங்கிரஸ் அரசு செய்யும் துரோகம். மேகேதாட்டில் அணை கட்டுவதை எதிா்க்க வேண்டாம் என்று தமிழக முதல்வரிடம் தமிழக திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோா் வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவா்கள் கா்நாடகத்துக்கு வர வேண்டாம். கா்நாடகத்தில் வசிக்கும் தமிழா்களை ரயில்கள், பேருந்துகளில் தமிழகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றாா்.