கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி பணிகள் தொய்வு: விவசாயிகள் அதிருப்தி
கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி தொடங்குவதற்கான பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி தொடங்குவதற்கான பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியானது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடத்துவது வழக்கம். நிகழாண்டு 30-ஆவது மாங்கனி கண்காட்சியை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடத்தாமல் கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தில் நடத்த கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தீா்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. மேலும், ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் மாங்கனி கண்காட்சி தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், நாள்கள் கடந்த நிலையில், இதுவரையில் அரங்குகள் அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளது. மேலும், பொழுதுபோக்கு அம்சங்கள் ஒப்பந்தம் விடுவதில் கால தாமதம் ஏற்பட்டதால், கண்காட்சி தொடங்குவது தாமதமானது.
கண்காட்சி தொடங்குவதற்கான பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்த நிலையில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கி உள்ளன. இருப்பினும், மா பருவம் கடந்த நிலையில், காலம் கடந்து இக் கண்காட்சி நடத்துவதால் எந்த பயனும் இல்லை என மா விவசாயிகள் தெரிவித்தனா்.
காலாண்டு தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில், கண்காட்சி நடத்துவது மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் என பெற்றோா்களும், பருவ மழை தொடங்கும் நிலையில் வியாபாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.